அன்பால் ஆட்கொல்லாதே

ரூபன் சிவராஜா நேற்று ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை வாசித்தபின் மனது கொட்டித் தீர்த்த வார்த்தைகள் இவை.

முதலில் கவிதையைப் பார்ப்போம்.

******

அந்தப் பூச்செடி
பச்சையாய் என்னுள் படர்கிறது

உன் தொடுதலின் ஸ்பரிசத்தையும்
கண்ணின் ஒளியையும்
உதட்டில் உதிரும்
சொற்களின் குளுமையையும்
உறிஞ்சி
மீண்டும் மீண்டும்
துளிர்க்கிறது
கிளையாய் சடைக்கிறது

துளிவிதையில்
பெருங்காடொன்றை விரிக்கிறது
ஒற்றைச் செடி காடாகும்
விந்தை!

******

இதுதான் ஒரு மனிதனுக்கான வாழ்வின் நிலத்தடி நீர்.
இதைவிட பேரின்ப வாழ்வேனும் உண்டா?

ஒரு மனிதன் உயிர்ப்புடன் இருப்பதற்கு சுவாசமும் உணவும் போதுமானது அல்ல என்பதை வாழ்ந்த அனுபவமுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியும். மனிதன் ஒரு சமூக மிருகம். அவனால் தனித்து வாழ்ந்துவிட முடிவதில்லை. இங்கு தனித்து எனப்படுவது இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது என்று மட்டும் பொருள்படாது. இன்னொரு மனிதன் மீதான நட்பு, அன்பு, காதல்,கருனை, கரிசனை என்று பலதையும் கொண்டது அது.

இந்த உலகில் அறுதி வறுமையானவர்கள் யார்? வருமானம் இல்லாதவர்கள் என்று மட்டும் வரையறுத்துவிடாதீர்கள். இவர்களுடன் ஒப்பிடுகையில் கனிவான பார்வைக்கு, இனிமையான வார்த்தைகளுக்கு, இன்னொரு மனிதனின் அன்பான ஸ்பரிசத்திற்கு ஏங்கும் மனிதர்களே மிகவும் கொடும் வறுமைக்கு உட்பட்டவர்கள். இந்த உலகில் இவர்களைவிட வறுமையாக வாழ்பவர்கள் வேறுயாரேனும் இருக்கமுடியமா? பசி, பிணி ஆகியவற்றிலும் கொடுமையானவை இவை. மற்றையவர்களின் வறுமையை பணம் ஈடுசெய்துவிடக்கூடும். ஆனால் இவர்களின் வறுமையை எது ஈடுசெய்யும்?

இப்படியானதொரு நிலை எல்லா மனிதர்களின் வாழ்விலும் வந்துபோயிருக்கும். அதிஸ்டசாலிகள் அதனை கடந்துகொள்கிறார்கள். மற்றையவர்களை அது ஒரு பிறழ்வுநிலைக்கு தள்ளிப்போகிறது. பிறழ்வுநிலை மனமானது மன அயர்ச்சி, மன அழுத்தம், சுயஇரக்கம், இயலாமை என்னும் ஒரு இருண்ட காலத்தினுள் இம்மனிதர்களை முழ்கடிக்கும்போது இவற்றில் இருந்து விடுபட்டு மீள்வது இலவல்ல.

இன்று ரூபனின் கவிதையை வாசித்தத்ததும் முதலில் நினைவிற்கு வந்தவர் கதிரவன். இவர்தான் யூமா வாசுகின் ”மஞ்சல் வெய்யில்” நாவலின் கதாநாயகன்.

தனது வேலைத்தளத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவளே அவரின் உயிர்ப்பான வாழ்வின் ஒரே ஒரு பாத்திரம். அவரின் நினைவு, கனவு எல்லாமே அவளாகவே இருக்கிறாள். ஒருநாள் தனது காதலை அவர் அவளிடம் தெரிவித்துவிடுகிறார். அவள் அவரை தான் காதலிக்கவில்லை என்றுவிடுவாள்.

அதன்பின் அம்மனிதர் படும் வலி உயிரைப்பிழிவதுபோலிருக்கும். கதிரவனின் ஏக்கம், ஏமாற்றம், சுயபரிதாபம், கனவு, காமம், தனிமை, வாழ்வு மீதான வெறுப்பு, நிராசை என்பன எவ்வாறு அவனது உயிரின் உயிர்ப்பை உறுஞ்சிவிடுகின்றன என்பதை அதை அத்தனை உணர்வுடன் எழுதியிருப்பார் யூமா வாசுகி. நான் அவன் இறந்துபோகட்டும் என்று விரும்பினேன். அவளின் காதலுக்காய் அன்புக்காய் அவன்பட்ட பாடு அத்தகையது.

”மஞ்சல் வெய்யில்” வாசித்தபின் சில நாட்கள் மனது கதிரவனின் பின்னாலேயே அலைந்துகொண்டிருந்தது. அவனின் நண்பனாக அவனை அணைத்து ஆறுதல் சொல்ல விரும்பினேன். அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை என்பது எல்லாவற்றிலும் கொடுமையானது. கதிரவன்தான் உலகின் வறுமையான மனிதனாகத் தோன்றினார்.

ஒரு மனிதனை நாம் எதிர்கொள்ளும்போது கண்ணில் கனிவான பார்வையிருப்பின், உதட்டில் சொற்களின் குளிர்மையிருப்பின் அது மனிதர்களை உயிர்ப்பிக்கும் என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை.

கனிவான பார்வையும், குளிர்மையான வார்த்தையும் எத்தனை எத்தனை மனக்காயங்களுக்கு களிம்பு தடவிவிடக்கூடியவை என்பதை எம்மில் எத்தனை பேர் சிந்தித்து நடந்திருக்கிறோம் நடக்கிறோம்?

இதையே மனப்பிளவுகளுக்கு மருந்தாக உபயோகித்திருக்கிறோமா? எம்மால் ஏன் இன்னொரு மனிதனை அன்புடனும், குளிர்மையுடனும் அணுகமுடியாதிருக்கிறது? இதுவும் ஒரு வறுமை நிலையல்லவா?

நானும் இவற்றை கடந்துவந்தவன்தான். காலம் பலதையும் கற்றுத்தந்திருந்தாலும் இப்போதும் தடக்கிவிழுந்தபடியேயே நடந்துகொண்டிருக்கிறேன். வாழ்வு நெடுக கற்றல் என்பது இதுதானோ.

அன்பால் ஆட்கொல்லாதே

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்