அன்பெனும் பேரிலக்கியம்

அன்பெனும் பேரிலக்கியம்
******
மனிதர்களின் மனங்கள் எத்தனை எத்தனை புதிர்களையும், புரிதல்களையும், கனவுகளையும், காயங்களையும், வலியையும் தாங்கியபடியே வாழ்க்கையைக் கடந்துகொள்கின்றன என்பது அதிசயமான விடயம். அங்கு கொட்டிக்கிடக்கிகும் கதைககளை காலமெல்லாம் எழுதித் தீர்க்கலாம்.

அக்கதைகளில் பல பேசப்பட்டிருக்கலாம், பல கதைகள் அம்மனிதர்களுடனேயே மறைந்தும் போயிருக்கும் அல்லவா?

நான் அறிந்த மனிதர்களின் கதைகளில் இரண்டு கதைகள் என்னை அதிகம் பாதித்திருக்கின்றன. ஒரு புனைவில் கண்ட ஒரு பாத்திரமும் அண்மையில் என்னை அதிகமாக சிந்திக்கவைத்திருக்கிறது.

அதேபோல் பல மனிதர்களின் பரந்த மனமும், இன்னொரு மனிதனின் வலிகளைப் புரிந்துகொள்ளும் அவர்களின் தன்மையும் என்னால் அவர்களைப்போன்று நடந்துகொள்ளமுடியுமா என்ற கேள்வியினையும் சில கதைகள் எனக்குள் எழுப்பியுள்ளன. அவை எனது சுயத்தினையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளன என்பதும் உண்மைதான்.

அண்மையில் ஈழத்தமிழ்ப்பெண்ணொருவர் நோர்வேஜிய மொழியில் எழுதிய ”La meg bli med deg” என்னும் நாவலில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு சீனப்பெண், கவனிப்பாரற்று வளரும் இரு நோர்வேஜிய குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்பார். தாயின் காதலனால் வன்புணரப்படும் பெண்குழந்தைக்கும் அவளது தம்பிக்கும் அவர் காண்பிக்கும் அன்பே அவர்கள் வாழ்வில் இருக்கும் சிறு நம்பிக்கை. இதனை கதாசிரியர் மிக அழகாகப் பேசியிருப்பார். அந்தப் பாத்திரபடைப்பையும் அதன் உண்மைத்தன்மையில் இருக்கும் உயிர்ப்பும் அந்நாவலின் முக்கிய பகுதிகள்.

மேற்கூறிய கதையின் இன்னொரு வடிவத்தை, சில வருடங்களுக்கு முன், எனக்கு அறிமுகமான ஒரு நண்பர் சொல்லக்கேட்டேன். வன்னிமண் யுத்தத்திலிருந்த காலத்தில் ஒரு குழந்தையின் இரு போராளிப்பெற்றோரும் மரணித்துவிட அந்த குழந்தையை ஒரு போராளிக்குடும்பத்தினர் தத்தெடுக்கின்றனர். அதற்கு முன்னும் அக்குடும்பத்தில் குழந்தைகள் உண்டு. அதற்குப்பின்னும் அவர்களுக்கு குழந்தைகள் கிடைக்கின்றன.

காலம் அந்தப் போராளியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டுவிட தன்னந்தனியே பல குழந்தைகளுடன் வாழ முயற்சித்திருக்கிறார் அந்தப் பெண்போராளி. வறுமையை தாங்க முடியாத நிலையில் ஒரு குழந்தையினை தத்துக்கொடுக்கும்படி பெரியவர்கள் அறிவுறுத்தியபோது தனது சொந்தக் குழந்தைகளில் ஒன்றினை தத்துக்கொடுத்துவிட்டு தான் தத்தெடுத்த குழந்தையை தன்னுடன் வளர்த்துக்கொண்டிருந்தார் அவர் என்று நண்பர் சொல்லக்கேட்டேன்.

இதை எழுதுவது மிகச் சுலபம். அந்த மனிதரின் இடத்தில் எம்மைப் பொருத்திப் பார்த்தால் புரியும் எத்தகைய போராட்டத்தை அவர் கடந்திருப்பார் என்பது. அதுமட்டுமல்ல தனது குழந்தையை தத்துக்கொடுத்த எண்ணம் அவருக்கு எவ்வித வலியை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தும் என்பதையும் எண்ணிப்பார்க்கிறேன். அதையும் ஏற்றுக்கொண்டபின்னாலல்லவா தனது முடிவினை அவர் எடுத்திருப்பார் இல்லையா? இதனை நடைமுறைப்படுத்த எத்தனை பெரிய மனம்வேண்டும்? இவ்விடத்தில் வறுமை ஒரு புறக்காரணியே. ஆனால் அந்த அகத்தின் அழகிற்கு ஈடுண்டா?

எனது தாயாரின் இரட்டைச்சகோதரி, அவர் எனது தந்தையின் நண்பரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஏறத்தாழ முழுக்குடும்பமும் அவரை ஒதுக்கிவைத்தது. எனது தந்தைக்கு அவர் இறக்கும்வரையில் இருவரிலும் பெருஞ்சினம் இருந்தது.

எனது அம்மாவும் அவரது அண்ணன் ஆகியோர் மட்டுமே அவருடன் நெருங்கிய தொடர்புகளைப்பேணினார்கள்.

அவர்கள் 1960 களின் நடுப்பகுதியில் தமது திருமணத்தின்பின் எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ்அபாபா நகரத்திற்கு ஆசிரியர்களாகச் சென்றார்கள். அவர்களுக்கு பல ஆண்டுகள் குழந்தைகள் கிடைக்கவில்லை. இறுதிவரையிலும் குழந்தைகள் கிடைக்கவில்லை.

1990களில் மாமா புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அவர்கள் அடிஸ்அபாபாவைவிட்டு வெளியேறவேண்டிய நிலை. நியுசிலாந்தில் தற்காலிகமாக வாழ்ந்திருந்தபோது மரணப்படுக்கையில் தனது மனைவியிடம் ஒரு பெரும் இரகசியத்தைப் பகிர்கிறார் மாமா.
ஆடிஸ்அபாபாவில் தங்கள் வீட்டில் உதவிக்கு வந்த அந்நாட்டுப் பெண்ணுடன் அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன என்பதே அது. அதன்பின் மாமா இறந்துபோகிறார்.

அம்மாவின் சகோதரி மீண்டும் எத்தியோப்பியாவிற்குச்சென்று அந்த மூன்று குழந்தைகளுடனும் அவர்களின் தாயாருடனும் அங்கு வாழ முயற்சிக்கிறார். வயது 60 நெருங்கிக்கொண்டிருக்கிறது. எத்தியோப்பியாவில் ஆசிரியராக தொழில்புரியும் அனுமதி மறுக்கப்பட்டமையால் அக்குழந்தைகளையும், அவர்களின் தாயாரையும் அழைத்துக்கொண்டு பிஜீ தீவுகளுக்கு ஆசிரியராகக் கடமையாற்றச் செல்கிறார்.

ஒரு வருமானத்தில், மிகவும் சிரமப்பட்டு அக்குழந்தைகளை கற்பித்து வளர்த்து ஆளாக்கியபின் மூத்த மகனை அமெரிக்காவில் கல்விகற்கச்செல்ல அனுப்பிவைக்கிறார். மகன் குடும்பத்தைக் காப்பாற்றத்தொடங்கியபின்பே இலங்கைக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின்னான சில வருடங்களில் நோயுற்று இறந்தும்போனார்.

தன்னை பல வருடங்களாக ஏமாற்றிய கணவனின் செயலைக் கண்டு ஏன் அவர் கோபம்கொள்ளவில்லை என்ற கேள்வி எனக்குண்டு.

இதுபற்றி பலநாட்கள் நான் சிந்தித்திருக்கிறேன். கணவரின் வஞ்சனையை மன்னிக்கும் மனம் இவருக்கு வருவதற்கு எது காரணமாயிருக்கிறது?

தனது வயோதிபக்காலத்திலும் தன்னை மீறி உழைத்து கணவரின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம்தான் என்ன? அதிலும் கணவருடன் இணைந்து தன்னை வஞ்சித்த பெண்ணையும் காப்பாற்றவேண்டியதேன்?

இங்குதான் சில மனிதர்கள் ஏனைய மனிதர்கள்கள்மீது கொள்ளும் பேரன்பு எனக்குப் புரிய ஆரம்பித்தது. தனது நலத்தில் ஆர்வம் காண்பிக்காது ஏனையவர்களின் நலத்தில் அன்புகாண்பிக்கும் மனித மனங்கள் எத்தனை உயர்ந்தவையாக இருக்கவேண்டும். அப்படியான மனம் ஏன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை?

இதனாற்தானா அன்பினை பேரிலக்கியம் என்கிறார்கள்?






No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்