காலப் புதிர்கள்

காலம் எப்போதும் புதிரானது. அது மகிழ்ச்சி, துக்கம், ஆச்சர்யம் அல்லது வேறுவிதமான மனநிலையைத் தருவதாக இருக்கலாம். ஆனால் எப்போதும் தனக்குள் ஒரு புதிரைக்கொண்டிருக்கும். இன்றைய நாள் மிகவும் கனமானது. நண்பர் ஒருவரின் இறுதிப்பயணத்தில் கலந்துகொண்டிருந்தேன். தேவாலயம் நிரம்பியிருந்தது. மரணத்தின் வாசனையை அங்கு உணரமுடிந்தது. மரணத்தை நெருக்கத்தை உணரும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு விதத்தில் சில பொழுதுகள் இறுகிப்போகிறார்கள். மௌனம் பேசும் நேரம் அது. அந்நேரங்களில் மரணம் அவர்களுடன் ஒருவித ஆத்மார்த்தமான உரையாடலை நடாத்திக்கொண்டிருக்கும். மரணம்பற்றிய சிந்தனைகள் அவர்களைப் பற்றிக்கொள்ளும். இவ்வளவுதானா வாழ்க்கை? இதற்காவா இவ்வளவு அலைகிறோம்? மரணத்தின் பின் என்ன நடக்கும்? என் இழப்பு யாருக்கு துயரையைக் கொடுக்கும்? என்று பலரும் சுய உரையாடலில் இருப்பார்கள். தேவாயத்தின் மணி ஒலித்தது. நோர்வேஜிய பாதிரியார் திருப்பலியை ஆரம்பித்தார். நான் கடைசி வாங்கில் உட்கார்ந்திருந்தேன். அவர் அதிகநேரம் பிரசங்கிக்கவில்லை. தமிழ் போதகரிடம் பொறுப்பினைக் கொடுத்துவிட்டு நகர்ந்துகொண்டார். திருப்பலி தொடர்ந்துகொண்டிருந்தது. எனது மனம் நோர்வேஜிய பாதிரியாரின் குரலில் லயித்துக்கிடந்தது. அமைதியான, ஆர்ப்பாட்டமற்ற, மனதை நெகிழச்செய்து வருடிவிடும் ஆளுமையான குரல். அந்தக் குரலில் மனம் கரைந்துகொண்டிருந்தபோதுதான், இந்தக் குரல் உனக்கு அறிமுகமானதல்லவா என்றது உள்மனது. எங்கே, எப்போது அறிமுகமான குரல் இது? யாருடைய குரல் என்று எனக்குள் நானே தேடிக்கொண்டிருந்தேன். பாதிரியாரின் முகமும் பரீட்சயமானதாக இருக்கவில்லை. எனது பலவீனங்களில் முதன்மையானது மனிதர்களின் முகங்களை நினைவில் நிறுத்திவைத்திருப்பது. பல இடங்களிலும் நான் இதனால் சங்கடப்படுகிறேன். ஆனால் பழகிய மனிதர்களின் குரல்கள் ஆழப் படிந்துபோயிருக்கும். அவர்களின் பெயர்களும் நினைவிருக்கும். எவ்வளவு தேடியும் அக்குரலுக்கானவர் யார் என்பது பிடிபடிவில்லை. திருப்பலியின்போது மரணத்தவரின் குழந்தைகள் தந்தைக்கான உரையை வழங்கிக்கொண்டிருந்தபோது. என் மனம் பல்வேறு சிந்தனைகளில் உருளத்தொடங்கியது. தனிமையான எனது வாழ்க்கை, எனது குழந்தைககளின் அருகாமையை இழந்திருப்பது என்று மனம் சுயபரிதாபத்தில் உளன்றது. கண்கலங்கிற்று. அங்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியில் வந்தேன். தனியே ஒரிடத்தில், பெரும் சாரளத்தின் முன் நின்றுகொண்டேன். வெளியே வெண்பனி நிலத்தை மூடியிருந்தது. வானத்தில் இருந்து பனித்துகள்கள் வீழத்தொடங்கின. மனது ஆறத்தொடங்கியது. அப்போது திடீர் என்று பாதிரியாரின் குரலையுடையவரின் பெயர் நினைவில் வந்தது. இது Dag Håland என்னும் பாதிரியாரின் குரல். வடமேற்கு நோர்வேயில் Hareid என்னும் கிராமத்திற்கு 1987 வைகாசி மாதம் இடம்பெயர்ந்து சென்றபோது அறிமுகமாகிய முதல் மனிதர் இவர். நாம் தங்கியிருந்த இடத்திற்கு மிக அருகிலேயே வசித்திருந்தவர். பிற்காலத்தில் அவருடைய இரண்டு பெண்குழந்தைகளுக்கும் நான் ஆசிரியனாக இருந்திருக்கிறேன். அவருடைய வீட்டில் நான் இரண்டுமுறை நத்தார்நாட்களை கொண்டாடியிருக்கிறேன். அன்பான மென்மையான மனிதர். தேவாலயத்திற்கு வெளியே ஒரு நோர்வேஜியர் நின்றிருந்தார். அவர் மரணநிகழ்வினை ஒழுங்குசெய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர். அவரிடம் இன்றைய போதகரின் பெயர் Dag Hålandஆ என்று வினாவினேன். ஆம், என்றார். திருப்பலி முடிந்து அனைவரும் தேனீர் அருந்திக்கொண்டிருந்தார்கள். பாதிரியாரின் கந்தோரைத் தேடிப்போனேன். அவரது மனைவி அங்கிருந்தார். நான் Hareidஇல் வாழ்ந்திருந்தவன் என்று அறிமுகப்படுத்தியபோது சற்றுத் உற்றுப்பார்த்த பின் ஆம்... நினைவிருக்கிறது என்றார். அப்போது அங்கு வந்த பாதிரியாருக்கும் என்னை நினைவிருந்தது. என்னை மட்டுமல்ல அவர் திருமணம்செய்துவைத்த எனது நண்பரொருவரின் பெயரும் நினைவில் இருந்தது. ‘1996ம் ஆண்டின்பின் இப்போதுதான் உன்னைச் சந்திக்கிறேன். 21 வருடங்களாகிவிட்டன. நீயும் உருவத்தில் மாறியிருக்கிறாய். நானும் கிழவனாகிவிட்டேன்’ என்றபோது புன்னகைத்தேன். ‘என்னை நினைவில் வைத்திருந்திருக்கிறாய் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதுசரி, என்னை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டாய்?’ ‘உங்களை நேரடியாகக் கண்டிருந்தால் அடையாளம் கண்டிருக்கமாட்டேன். ஆனால் திருப்பலின்போது உங்கள் குரலைக்கேட்டேன்’ மீண்டும் கையை இறுகப்பற்றிக்கொண்டார். சற்றுநேரம் மௌனமாயே கழிந்தது. நாம் விடைபெற்றபோது ‘நன்றி. உன்னை சந்தித்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நண்பர்களுக்கும் அன்பைத் தெரிவி’ என்றார். நடக்கத்தொடங்கினேன். வெண்பனித் துகள்கள் காற்றில் பரவத்தொடங்கியிருந்தது.

சவம்

நண்பரின் வீட்டில் ஒரு பதின்மவயதுப் பூலான்தேவி மீதமிருக்கிறாள்.

அவளுக்கு என்னிடமும், எனக்கு அவளிடமும் சேட்டைவிடவேண்டும்.

காணும் இடங்களிலெல்லாம் எனது தலையில் மிருதங்கம் வாசிக்கும் வித்துவான் அவள்.

பதிலுக்கு பூலான்தேவியைக் காணும்போதெல்லாம் ”அடியேய் கறுப்பி” என்பபேன்.

அதற்கு அவள் ”போடா சவம்” என்பாள்.

சவத்திற்கும் உயிர்கொடுக்கக்கூடியது அவளது செல்லத் தமிழ்

ஒருநாள் ”அம்மாச்சி, சவம் என்றால் என்ன?” கேட்டேன்.

”தெரியாது.. அப்பாவுக்கு கோபம் வந்தால் அப்படித்தான் சொல்லுவார்” என்றாள்.

”அப்ப நீ சொல்லாம்” என்றேன்.

அண்மையில் ஒரு மண்டபத்தில் பலருடன் நின்றிருந்தாள். அருகே சென்று ”தலையைத் நீவிவிட்டேன்”

அருகே இருந்தவர்கள் ”இவரா உன் தந்தை என்றார்கள்”

”எனக்கு இவரும் தந்தை என்றாள்”

உச்சிமோர்ந்து.... ”நன்றி கறுப்பி” என்றேன்

போடா சவம் என்றாள்.

1924 இல் எழுதப்பட்ட ”போலித் தேசியக் கதை”

எனது ஒஸ்லோ முருகன் சத்தியமாக, தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் “உலகம் பலவிதம்” என்னும் நூலில் 130ம் பக்கத்தில் உள்ள ஒரு சிறு கதையை கீழே பகிர்ந்துள்ளேன்.
***

உலகம் பலவிதம்: 1924 ஜூலை 17

ஒரு மரத்திலே நீண்ட கயிற்றினாற் கட்டப்பட்ட ஒட்டகம் அக்கயிறு அவிழ்ந்துவிட, அதனையும் இழுத்துக்கொண்டு செல்வதை ஒரு எலி கண்டது. கண்ட எலி ஒட்டகம் வழிதெரியாது அலைகின்றதென நினைத்து அக்கயிற்றின் நுதியைத் தன் வாயிற் கௌவிக்கொண்டு முன்னே சென்றது. எலி கயிற்றைக் கௌவிக் கொண்டு தன்னை வழிநடத்திச் செல்வதாக எண்ணி முற் செல்வதையுணர்ந்த ஒட்டகம் தனக்குட் சிரித்துக்கொண்டு பின்னே போகும் போது ஒரு ஆறு குறுக்கிடுதலும் எலி செய்வ தின்னதென்றறியாது ஒட்டகத்தைத் திரும்பிப் பார்த்தது. அப்பொழுது ஒட்டகம் சிரித்து “அண்ணே, ஏன் நிற்கின்றாய், இதுவரையும் என்னை வழிநடத்தியதுபோல் இனியும் வழிநடத்திச் செல்லலாமே” என்றது. உடனே, எலி தன் சிறுமையை உள்ளபடியுணர்ந்து நாணமடைந்து கயிற்றை விடுத்து அப்புறமகன்றது. இந்த எலியைப்போன்ற மனுஷர்களுஞ் சிலர் இருக்கின்றார்கள். பெருங்கருமங்களில் அழைப்பாரின்றித் தாமாகச் சென்று தலையிட்டுக்கொண்டு, தம்மாலேயே அக்கருமம் நடைபெறுவதாக வீணெண்ணங் கொள்ளுகின்றார்கள். அக்கருமங்கட்கு யாதும் சங்கடமேற்படும்போதே கருமத்தின் பெருமையும் இவர்களின் சிறுமையும் புலப்படும்.

***

இக்கதை இன்றைய புலம்பெயர் போலிகளையும், மிக முக்கியமாக ஒஸ்லோ தமிழரின் அரசியலையையும் உங்களுக்கு நினைவூட்டினால் அதற்கு ஆச்சிரமம் பொறுப்பல்ல.


டொட்.


#உலகம்_பலவிதம்

அன்பெனும் பேரிலக்கியம்

அன்பெனும் பேரிலக்கியம்
******
மனிதர்களின் மனங்கள் எத்தனை எத்தனை புதிர்களையும், புரிதல்களையும், கனவுகளையும், காயங்களையும், வலியையும் தாங்கியபடியே வாழ்க்கையைக் கடந்துகொள்கின்றன என்பது அதிசயமான விடயம். அங்கு கொட்டிக்கிடக்கிகும் கதைககளை காலமெல்லாம் எழுதித் தீர்க்கலாம்.

அக்கதைகளில் பல பேசப்பட்டிருக்கலாம், பல கதைகள் அம்மனிதர்களுடனேயே மறைந்தும் போயிருக்கும் அல்லவா?

நான் அறிந்த மனிதர்களின் கதைகளில் இரண்டு கதைகள் என்னை அதிகம் பாதித்திருக்கின்றன. ஒரு புனைவில் கண்ட ஒரு பாத்திரமும் அண்மையில் என்னை அதிகமாக சிந்திக்கவைத்திருக்கிறது.

அதேபோல் பல மனிதர்களின் பரந்த மனமும், இன்னொரு மனிதனின் வலிகளைப் புரிந்துகொள்ளும் அவர்களின் தன்மையும் என்னால் அவர்களைப்போன்று நடந்துகொள்ளமுடியுமா என்ற கேள்வியினையும் சில கதைகள் எனக்குள் எழுப்பியுள்ளன. அவை எனது சுயத்தினையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளன என்பதும் உண்மைதான்.

அண்மையில் ஈழத்தமிழ்ப்பெண்ணொருவர் நோர்வேஜிய மொழியில் எழுதிய ”La meg bli med deg” என்னும் நாவலில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு சீனப்பெண், கவனிப்பாரற்று வளரும் இரு நோர்வேஜிய குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்பார். தாயின் காதலனால் வன்புணரப்படும் பெண்குழந்தைக்கும் அவளது தம்பிக்கும் அவர் காண்பிக்கும் அன்பே அவர்கள் வாழ்வில் இருக்கும் சிறு நம்பிக்கை. இதனை கதாசிரியர் மிக அழகாகப் பேசியிருப்பார். அந்தப் பாத்திரபடைப்பையும் அதன் உண்மைத்தன்மையில் இருக்கும் உயிர்ப்பும் அந்நாவலின் முக்கிய பகுதிகள்.

மேற்கூறிய கதையின் இன்னொரு வடிவத்தை, சில வருடங்களுக்கு முன், எனக்கு அறிமுகமான ஒரு நண்பர் சொல்லக்கேட்டேன். வன்னிமண் யுத்தத்திலிருந்த காலத்தில் ஒரு குழந்தையின் இரு போராளிப்பெற்றோரும் மரணித்துவிட அந்த குழந்தையை ஒரு போராளிக்குடும்பத்தினர் தத்தெடுக்கின்றனர். அதற்கு முன்னும் அக்குடும்பத்தில் குழந்தைகள் உண்டு. அதற்குப்பின்னும் அவர்களுக்கு குழந்தைகள் கிடைக்கின்றன.

காலம் அந்தப் போராளியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டுவிட தன்னந்தனியே பல குழந்தைகளுடன் வாழ முயற்சித்திருக்கிறார் அந்தப் பெண்போராளி. வறுமையை தாங்க முடியாத நிலையில் ஒரு குழந்தையினை தத்துக்கொடுக்கும்படி பெரியவர்கள் அறிவுறுத்தியபோது தனது சொந்தக் குழந்தைகளில் ஒன்றினை தத்துக்கொடுத்துவிட்டு தான் தத்தெடுத்த குழந்தையை தன்னுடன் வளர்த்துக்கொண்டிருந்தார் அவர் என்று நண்பர் சொல்லக்கேட்டேன்.

இதை எழுதுவது மிகச் சுலபம். அந்த மனிதரின் இடத்தில் எம்மைப் பொருத்திப் பார்த்தால் புரியும் எத்தகைய போராட்டத்தை அவர் கடந்திருப்பார் என்பது. அதுமட்டுமல்ல தனது குழந்தையை தத்துக்கொடுத்த எண்ணம் அவருக்கு எவ்வித வலியை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தும் என்பதையும் எண்ணிப்பார்க்கிறேன். அதையும் ஏற்றுக்கொண்டபின்னாலல்லவா தனது முடிவினை அவர் எடுத்திருப்பார் இல்லையா? இதனை நடைமுறைப்படுத்த எத்தனை பெரிய மனம்வேண்டும்? இவ்விடத்தில் வறுமை ஒரு புறக்காரணியே. ஆனால் அந்த அகத்தின் அழகிற்கு ஈடுண்டா?

எனது தாயாரின் இரட்டைச்சகோதரி, அவர் எனது தந்தையின் நண்பரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஏறத்தாழ முழுக்குடும்பமும் அவரை ஒதுக்கிவைத்தது. எனது தந்தைக்கு அவர் இறக்கும்வரையில் இருவரிலும் பெருஞ்சினம் இருந்தது.

எனது அம்மாவும் அவரது அண்ணன் ஆகியோர் மட்டுமே அவருடன் நெருங்கிய தொடர்புகளைப்பேணினார்கள்.

அவர்கள் 1960 களின் நடுப்பகுதியில் தமது திருமணத்தின்பின் எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ்அபாபா நகரத்திற்கு ஆசிரியர்களாகச் சென்றார்கள். அவர்களுக்கு பல ஆண்டுகள் குழந்தைகள் கிடைக்கவில்லை. இறுதிவரையிலும் குழந்தைகள் கிடைக்கவில்லை.

1990களில் மாமா புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அவர்கள் அடிஸ்அபாபாவைவிட்டு வெளியேறவேண்டிய நிலை. நியுசிலாந்தில் தற்காலிகமாக வாழ்ந்திருந்தபோது மரணப்படுக்கையில் தனது மனைவியிடம் ஒரு பெரும் இரகசியத்தைப் பகிர்கிறார் மாமா.
ஆடிஸ்அபாபாவில் தங்கள் வீட்டில் உதவிக்கு வந்த அந்நாட்டுப் பெண்ணுடன் அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன என்பதே அது. அதன்பின் மாமா இறந்துபோகிறார்.

அம்மாவின் சகோதரி மீண்டும் எத்தியோப்பியாவிற்குச்சென்று அந்த மூன்று குழந்தைகளுடனும் அவர்களின் தாயாருடனும் அங்கு வாழ முயற்சிக்கிறார். வயது 60 நெருங்கிக்கொண்டிருக்கிறது. எத்தியோப்பியாவில் ஆசிரியராக தொழில்புரியும் அனுமதி மறுக்கப்பட்டமையால் அக்குழந்தைகளையும், அவர்களின் தாயாரையும் அழைத்துக்கொண்டு பிஜீ தீவுகளுக்கு ஆசிரியராகக் கடமையாற்றச் செல்கிறார்.

ஒரு வருமானத்தில், மிகவும் சிரமப்பட்டு அக்குழந்தைகளை கற்பித்து வளர்த்து ஆளாக்கியபின் மூத்த மகனை அமெரிக்காவில் கல்விகற்கச்செல்ல அனுப்பிவைக்கிறார். மகன் குடும்பத்தைக் காப்பாற்றத்தொடங்கியபின்பே இலங்கைக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின்னான சில வருடங்களில் நோயுற்று இறந்தும்போனார்.

தன்னை பல வருடங்களாக ஏமாற்றிய கணவனின் செயலைக் கண்டு ஏன் அவர் கோபம்கொள்ளவில்லை என்ற கேள்வி எனக்குண்டு.

இதுபற்றி பலநாட்கள் நான் சிந்தித்திருக்கிறேன். கணவரின் வஞ்சனையை மன்னிக்கும் மனம் இவருக்கு வருவதற்கு எது காரணமாயிருக்கிறது?

தனது வயோதிபக்காலத்திலும் தன்னை மீறி உழைத்து கணவரின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம்தான் என்ன? அதிலும் கணவருடன் இணைந்து தன்னை வஞ்சித்த பெண்ணையும் காப்பாற்றவேண்டியதேன்?

இங்குதான் சில மனிதர்கள் ஏனைய மனிதர்கள்கள்மீது கொள்ளும் பேரன்பு எனக்குப் புரிய ஆரம்பித்தது. தனது நலத்தில் ஆர்வம் காண்பிக்காது ஏனையவர்களின் நலத்தில் அன்புகாண்பிக்கும் மனித மனங்கள் எத்தனை உயர்ந்தவையாக இருக்கவேண்டும். அப்படியான மனம் ஏன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை?

இதனாற்தானா அன்பினை பேரிலக்கியம் என்கிறார்கள்?


எதிர்காலமும் இருப்பும்

இலங்கையில் பல கலாச்சாரங்களுடனும் வாழவேண்டிய அவசியம் இல்லை எனலாம். அங்குள்ள சமூக்கட்டமைப்பு அப்படி.

ஆனால் புலத்து வாழ்வியல் அதற்கு நேர் எதிரானது. உலகத்து மக்கட்கூட்டங்கள் அனைவரும் இணைந்துவாழும் சூழலைக் கொண்டது புலத்து வாழ்க்கை.

ஒரு இனம் தனியே வாழ்வதற்கும், பல சமூகங்களுடன் இணைந்து வாழ்வதற்கும் பலத்த வேறுபாடு உண்டல்லவா?

புலத்தில், குறிப்பிட்டவொரு நாட்டிற்கு இடம்பெயர்ந்த அனைவருமே சிறுபான்மையினராகவே இருப்பர். இவர்களுக்கான சவால்கள் பொதுவானவையாகவே இருக்கும். எனவே சிறுபான்மைகள் இணைந்துவாழவேண்டிய நிர்ப்பந்தத்தை சமூகங்களின் இணைந்த வாழ்வின் அவசியமும் ஏற்படுத்துகிறது.

இவ்வாறான சூழ்நிலைகளில் ஏனைய சமூகங்களுடன் நாம் இணைந்து வாழவேண்டும் என்பது இன்றியமையாதது என்பது வெளிப்படை.

நோர்வேயில் தமிழர்கள் குடியேறிய காலப்பகுதியில் வெளிநாட்டவர் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகாலத்தில் ஆபிரிக்கக்கண்டத்தவர்கள், மத்திய கிழக்கு, மேற்காசியச் சமூகங்கள் என்று பல இனமக்கள் நோர்வேயில் குடியேறியுள்ளனர்.

எமது குழந்தைகளும், எதிர்காலச் சந்ததியினரும் விரும்பியோ விரும்பாமலோ பல்கலாச்சார சமூகத்தில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை மறுக்க முடியாதல்லவா?

இவ்வாறான ஒரு கூட்டுக்கலாச்சாரத்தில், இணைந்த சமூக வாழ்வில் வாழ்வதுபற்றி எமது குழந்தைகளுக்கு, இளையோருக்கு கற்றுக்கொடுப்பதற்கான தேவையும் அவசியமும் இருப்பதை பற்றி நாம் கவனத்தில் எடுத்துள்ளோமா ?
எத்தனை எத்தனை முற்கற்பிதங்களுடன் நாம் வாழ்கிறோம்?

கறுவல், சோமாலி, சப்பைமூக்கு, கறுவல் களவெடுப்பான். சோனியை நம்பாதே, கிழக்கைரோப்பியன் கள்ளன் என்று எத்தனை எத்தனை அடைமொழிகளுடன், முற்கற்பிதங்களுடன் சக மனிதர்களை நாம் அணுகுகிறோம்?

இப்படியான கற்பிதங்கள் குழந்தைகளின் மனதில் பதிவாவதுடன் அவர்களது சிந்தனையிலும் மனப்பாங்கிலும் கருத்தாக்கங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இவ்வாறான சிந்தனை இணைந்துவாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சமூகத்தினை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லுமா என்பதையும் நாம் சிந்திக்கிறோமா?

தமிழர்கள் தமக்குள் சிறப்பாக இணைந்து செயற்படக் கூடியவர்கள். தமக்கென்று விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச் சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் என்று பலதையும் செயற்படுத்துகிறார்கள்.

ஆனால் பல்சமூகத்துடன் பல ஆண்டுகளாக வாழத்தொடங்கிவிட்ட எம்மால் ஏனைய சமூகங்களுடன் குறிப்பிடத்தக்களவான இணைந்தசெயற்பாட்டை ஏன் இதுவரை செயற்படுத்தமுடியாதிருக்கிறது?

இதற்கான தடைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? என்பதை ஆராயவேண்டிய காலத்தில் நிற்கிறோம் என்றே எண்ணுகிறேன்.

கடந்தவாரம் ஒஸ்லோ நகரசபை நடாத்தியதொரு கருத்தரங்கில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பல்கலாச்சார சமூகமும் சனநாயகமும் என்ற தலைப்பில் பல உரைகளும் கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

அவற்றின் சாரமானது பல்கலாச்சாரச் சமூகத்தை பிரதிபலிக்கும் விதமாகவே சமூக நிறுவனங்கள் செயற்படவேண்டும். அவற்றுடன், பெண்கள் மற்றும் இளையோருக்கான பிரதிநிதித்துவம் நிறுவனங்களின் மீதான அரசின் நம்பிக்கையினை பலப்படுத்த உதவும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நோர்வேயில் இயங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல அரசு வழங்கும் மானியங்களிலேயே தங்கியிருக்கின்றன என்பது பலரும் அறிந்ததே. அங்கத்தவர்களால் கிடைக்கும் சந்தாப்பணத்தை அடிப்படையாகக்கொண்டு பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது என்பதை அனைவரும் அறிவோம்.

பல்சமூகத்திற்கான செயற்பாடுகளைச் செயற்படுத்தும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுக்கு அரசின் மானியங்கள் வழங்கப்படும்போது முன்னுரிமை வழங்கப்படும் என்னும் செய்தி இன்றைய காலத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுகிறது நாம் முக்கியமாக அவதானிக்க வேண்டும்.

எனவே தமிழர்களின் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், தமது செயற்பாட்டுத்தளங்களை அகலிக்கும் சிந்தனைக்கு தங்களை உட்படுத்தவேண்டியதொரு நிலைக்கு தற்போது நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.

எதிர்காலத்தில் பல்சமூகச் சிந்தனைகள் நோர்வேயின் வாழ்வியலில் முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

இப்படியானதோர் காலத்திற்கு எம்மையும் எமது இளையோரையும் தயார்படுத்தவேண்டிய பொறுப்பு சமூக முன்னேற்றத்தை விரும்பும் அனைத்து தமிழர்சார் நிறுவனங்களுக்கும் உண்டு.

இன்றைய பல்சமூகச் செயற்பாடுகளில் எமது ஈடுபாடுகளை பிரக்ஞை பூர்வமாக நகர்த்தி, இச் செயற்பாடுளை எம்மவர்கள் நகர்த்தச்செல்வதும், பல்சமூகத்து அரசியலில் நாம் எமது வகிபாகத்தை முன்னெடுப்பதுமே இன்று நாம் செய்யக்கூடிய சமூகச் செயற்பாடாகும்.“

நோர்வே அரசியலில் வெளிநாட்டவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவரும் காலமிது. இதனை புத்திசாலித்தனமாக எமக்கு சாதகமான புலத்து அரசியலுக்கும், தளத்து அரசியலின் நியாயபூர்வமான கோரிக்களுக்கும் பயன்படுத்துவதே எமது நோக்கமாக இருக்கவேண்டும். இதற்கான முன்தயாரிப்புக்களை, முன்னேற்ப்பாடுகளை ஏனைய சமூகங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதை நோர்வே அரசியல் எடுத்துக்காட்டுகிறது.

எனவே எதிர்காலத்திற்கான எமது அரசியற் நகர்வுகளை ஆராய்ந்து அதற்கேற்ற நகர்வுகளை தமிழர்களின் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதே எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையும்.

வற்றாக் கதைகள்

எனக்கு கதைகளில் பெரும் ஆர்வமுண்டு. இதன்பெருமை எனது தாயாருக்கே உரியது. அவர் என்னையும் தம்பியையும் தனது இருபக்கங்களிலும் இருத்தி வாசித்த கதைகளுக்கு எண்ணிக்கையில்லை. அதைவிட அவர் வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்.

எனக்கு இரண்டு மகள்கள். அவர்களுக்கு ஏறத்தாழ 4 வயது இடைவெளியுண்டு. தங்கை பிறக்கும்வரையில் மூத்தவளுக்கும் எனக்குமான ஒரு இரகசியஉலகம் இருந்தது. தங்கைக்கு விபரம்புரியத்தொடங்கியதும் அந்த இரகசிய உலகம் மூவருக்கு என்றானது.

கதைகேட்பது என்றால் எனது மகள்களுக்கு பெருவிருப்பம் இருந்தது. கதைசொல்வதில் எனக்கு பிடிப்பு இருந்தது. இரவு படுக்கையில் தினமும் புதிய புதிய கதைகள் சொல்வேன். ஒரு காலத்தில் என்னிடம் இருந்த கதைகள் தீர்ந்துபோனபோது கற்பனையில் கதைகளை உருவாக்கினேன். அவற்றை விரிந்த கண்ணுடன் ஒருத்தி கேட்டுக்கொண்டிருக்க மற்றையவள் கையைச் சூப்பியபடி கேட்டுக்கொண்டிருப்பாள்.

1945ஆண்டு பின்லாந்தில் குழந்தைகளுக்கான மும்மி த்ரொல் (ஆங்கிலத்தில் Moomins) என்னும் நூல் வெளிவருகிறது. அதனை எழுதியவர் பின்லாந்து மற்றும் சுவீடனைச் சேர்ந்த  Tove Jansson என்னும் எழுத்தாளரும் சித்திரக்கலைஞருமாவார். அதன்பின்னான 25 வருடங்களில் அவர் மேலும் அக்கதையின் தொடர்ச்சியாக 12 நூல்களை வெளியிடுகிறார். அவை குழந்தைகளுக்கான சித்திரங்களையும், கதைகளையும் உள்ளடக்கிய நூல்கள். பிற்காலத்தில் அவை  திரைப்படங்களாகவும் வெளிவரும் என்பதையோ, குழந்தைகள் இக்கதையை கொண்டாப்போகிறார்கள் என்றோ அவர் அன்று அறிந்திருக்கமாட்டார்.

இக்கதை ஒரு காட்டில் வாழும் நோர்வேஜிய மொழியில் Troll என்று அழைக்கப்படும் குறளிகளைக் அடிப்படையாகக்கொண்டது. கதையின் கரு குடும்பஉறவுகள், குழந்தையின் வளர்ச்சி, சூழல் அமைப்புக்கள், பருவகாலங்கள் என்று பலதையும் உள்ளடக்கியது. கதைக்களம் மலைப்பகுதியில் உள்ள ஒரு காடு. அங்கு தனது குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறது மும்மி என்னும் பாத்திரம்.

சுற்றாடலை ஆராய்ந்தறியும் ஆர்வம் மும்மிக்கு அதிகம். ஆதனால் அவன்படும் அவஸ்தைகளும் அதிகம். அவனைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் ஒரு சமூகத்தைப் பிரதிபலிப்பதாயும் நன்மை தீமைகளை உள்ளடக்கியதாயும் இருக்கும். கதைகள் மிக விறுவிறுப்பானவை.

நோர்வேஜிய அரச தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான நேரங்களில் மும்மி கதையை வெளியிட்டனர். அது பலத்த வெற்றியையீட்டியது. கடைகளில் மும்மி படம்கொண்ட உடைகள், பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள், விளையாட்டுப்பொருட்கள், தேனீர்க்குவளைகள், சாப்பாட்டுக்கோப்பைகள் என்று பலதும் விற்றுத்தீர்ந்தது.

எனது மகள்களுக்கான கதைகள் தீர்ந்துபோனபோது நான் இந்த மும்மியை எனது கதைகளுக்குள் அழைத்துவந்தேன். காடு, மிருகங்கள், பனிநிறைந்த மலைகள் என்று பலவிடயங்களை உள்ளடக்கி பறக்கும் கம்பளத்தையும் இணைத்துக் கதைபேசி சில காலங்களைக் கடந்துகொண்டேன்.

அப்போது எங்கள் ஊருக்கு மும்மி கதையை நாடகமாக அரங்கேற்றும் குழுவினர் வந்தார்கள். மூத்தவளுக்கு பாடசாலையில் இதுபற்றி கூறியதில் இருந்து «நாடகம் பார்க்கவேண்டும்” என்றாள். இளையவளுக்கு எதுவும் புரியாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

நாடக அரங்கேற்ற நாள் வந்தது. ஊரே திருவிழாக்கோலம்பூண்டது. குழந்தைகளும் பெரியவர்களும் மும்மியைப்போன்று அலங்கரித்துக்கொண்டு நாடகத்திற்கு வந்தார்கள். நாங்களும் சென்றோம். அக்காள் கதிரையின் நுனியில் உட்கார்ந்திருந்து ரசித்தாள். இளையவள் எனது கழுத்தைக் கட்டிக்கொண்டு பார்த்தாள். பயுமூட்டும் காட்சிகள் வந்தபோது என்னை இறுகக்கட்டிக்கொண்டாள்.

நாடகம் முடிந்ததும் அக்காள் மும்மியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாள். தங்கைக்கு அதன் மிக நீண்ட மூக்கு பயமளித்ததால் என் கையைவிட்டு இறங்க மறுத்தாள்.

அன்றிரவு நாம் மும்மியைப்பற்றிப் பேசிக்கொண்டே உறங்கிப்போனோம்.
நேற்று மாலை ஒரு நண்பரின் வீட்டில் திருத்தவேலைகள் செய்யும்போது ஒரு பெட்டியினுள் மும்மியின் படம் பதியப்பட்ட தேனீர்க்குவளையைக் கண்டதும் எங்கள் கதை அங்கு திரும்பியது.

மருத்துவக்கற்கையில் இறுதி ஆண்டில் உள்ள தனது மகளின் தேனீர்க்குவளை அது என்றார் அவர்.

நான் மும்மியை எனது கதைகளுக்குள் அழைத்துவந்து நாட்களையும், எனது மகள்களையும், வீட்டில் இருந்த மும்மி நூல்களையும், அந்த நாடகம் நடைபெற்ற தினத்தினையும் நினைத்துப்பார்த்தேன்.

குழந்தைகளாய் இருந்தபோது கதை கேட்பதற்காய் ஆவலுடன் இருக்கும் மனிதர்கள் ஏன் வளர்ந்தபின் கதை மேலிருக்கும் ஆர்வத்தினை இழந்து போகிறார்கள்?
வாழ்க்கை என்னும்  கதையில் அவர்கள் வாழத்தொடங்குவதாலா?

மனிதம் வாழ்ந்திருந்த காலமது


நினைவுகளை உயிர்ப்பிப்பதற்கு ஒரு சிறு காட்சிபோதுமானதல்லவா? இன்று முகப்புத்தகத்தில் ஒருவர் ஏறாவூரில் உள்ள ஒரு டெயிலரின் புகைப்படத்தை இட்டிருந்தார். அது ஏற்படுத்திய நினைவலை இது. 1980 களில் பதின்மவயதுக் கோளாறுகளுடன் அலைந்து திரிந்த காலம். உடைகளில் அதீத கவனம். மினுக்காத உடைகள் நான் அணிவதில்லை. மூத்தவன் படிக்கிறான். அதுவும் சென்றல் கொலிஜில். கள்வனுக்கு போலீஸ் வேலைகொடுத்ததுபோன்று அவனுக்கு மாணவர் தலைவர் பதவியைவேறு அதிபர் கொடுத்திருக்கிறார் என்பதற்காக அம்மா காலையில் உடைகளை மினுக்கிவைப்பார். எனக்குப் பிடிக்காத உடைகளை (அழகாகப் பொருந்தாத) அவர் மினுக்கினால் அன்று காலை அம்மாவிற்கு உரு ஆடிக் காண்பிப்பேன். அந்நாட்களில் பெல்பொட்டம் பிரபலமாக இருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் தைப்பதற்கு கொடுப்பார்கள். அந்த தையற்கார் உடையின் நேர்த்தியில் அதிக கவனமெடுப்பதில்லை. எனவே நான் அங்கு செல்வதில்லை. ஏறாவூர் லங்காபேக்கரிக்கு முன்னிருந்த ஒரு கடையின் முன்பக்க ஓரத்தில் தனது தையல்இயந்திருத்துடன் ஒருவர் குந்தியிருப்பார். அவர் எப்படி அறிமுகமாகினார் என்பது நினைவில்லை. அவர் பெயர் நினைவில் இல்லை. ரவூப் அல்லது ராசீக் என்பதாயிருக்கலாம். 30 – 35 வயதிருக்கும். ஏழ்மை அவருடன் இருந்தது. திருமணமாகி குறுகியகாலத்திலேயே அவர் மனைவி புற்றுநோயால் இறந்துபோனார். சிறு குழந்தையும் அவருக்கு இருந்தது. குழந்தையைப் பார்க்கவென்று பகல்நேரங்களில் அடிக்கடி சைக்கிலில் புறப்பட்டுவிடுவார் அவர். நான் அவரை நானா என்றே அழைத்தேன். அவர் மனே என்பார். உடையின் நேர்த்தியில் மிகக் கவனமெடுத்து, அழகாகத் தைப்பார். குரு, உல்லாசப்பறவைகள் படங்களின் பாதிப்பில் உடையணிந்த காலம் அது. பத்திரிகைகளில்வரும் நடிகர்களின் படங்களைக் காண்பித்து இப்படி சைட் பொக்கட் வைய்யுங்கள், பின்பக்க பொக்கட்டுக்கு மூடி இருக்கவேண்டும், இப்படி கொலர் வைய்யுங்கள் என்று எதைக்கொடுத்தாலும் மறுநாள் அதை மிக அழகாக முடித்துத்தருவார். மறுநாள் காலையில் வசந்தமாளிகை ஆனந்தின் நடையில் நெஞ்சு நிமிர்த்தி பேரூந்து நிலையத்திற்குச் செல்வேன். அழகிகளின் கண்கள் என்னை மொய்க்கவேண்டும் என்று நெஞ்சு படபடக்கும். பதின்மவயதின் முதற்காதல் ஆரம்பித்த நாட்கள் அவை. அந்தக் கண்கள் உடையினை ரசிப்பது எனக்குப் புரியும்போது நண்பன் இடுப்பில் குத்துவான். அதன் அர்ததத்தை நான் ஏற்கனவே உணர்ந்திருப்பேன். அந்நாட்களில் நீல நிறத்தில் சிறிய வெள்ளைக்கோடுகள் இட்ட ஒரு நைலோன் துணியொன்று மிகப்பிரபல்யமாய் இருந்தது. அந்நாட்களில்தான் மிக நீண்ட கொலர் வைத்த மேலாடைகளும் பிரபல்யமாய் இருந்தன. நைலோன், ரெற்றோன், பொலியஸ்டர், பொப்லின், பற்றிக், கொட்ரோய், கறா என்று பலவகைப்பட்ட துணிவகைகள இருந்தன. எனது தையற்காரரே இவற்றை அறிமுகப்படுத்துவார். அவர் எங்கிருந்து இவற்றை அறிந்தாரோ என்று இன்று நினைத்துப்பார்க்கிறேன். பெல்பொட்டம் மறைந்தபோது எனக்கு முதலாவது லோங்ஸ் தைத்துத் தந்தவரும் அவரே. லோங்ஸின் கீழ்ப்பகுதி மடித்துத் தைப்பதே அப்போது பிரபல்யமாய் இருந்து. அதையும் பலவிதமாகத் தைக்கலாம். குரு படத்தில், பறந்தாலும் விடமாட்டேன் பாடலில் கமல் ஒரு தொப்பி போட்டிருப்பார். ஏறத்தாழ அதைப்போன்று ஒரு தொப்பிவேண்டும் என்றேன். சிரித்தபடியே தலையாட்டினார். பின்பொருநாள் Cuffley cap இற்கு ஆசைப்பட்டேன். சிரித்தபடியே தைத்துத்தந்தார். காலப்போக்கில் எனது நட்புப்பட்டாளத்தின் ஆஸ்தான தையற்காரர் ஆனார். சிங்கள நண்பர்களும் அவரிடமே தைத்தார்கள். பெருநாட்கள் என்றால் மனிதர் இரவுபகலாகத் தைப்பார். வீட்டிலும் தைப்பார். பழைய போலீஸ் நிலையத்தின் முன்பாக வாவியினை நோக்கிச் செல்லும் வீதியினால் அவர் வீட்டுக்குச் சென்ற நினைவிருக்கிறது. 1984 -1985 ல் என்று நினைக்கிறேன். கறுப்புநிறதுணியில் மெது குங்கும நிறத்தில் பெரிய சதுரங்களைக்கொண்ட ஒரு நைலோன் துணியில் ஒரு மேலாடை தைத்துத் தந்தார் (அந்தத் துணி மிகப்பிரபலமாக இருந்தது அந்நாட்களில்). அதன்பின்னான ஒருநாள் தமிழரும் இசுலாமியரும் வெட்டிக்கொண்டார்கள். ஊரே பிரளயமானது. மீண்டும் ஊர் வழமைக்கு மீண்டபோது அவரைக் காணவில்லை. கலவரம் அவரையும் அழைத்துப்போனதாய் கூறக்கேட்டேன். கண்களை மூடி நானாவை நினைத்துப்பார்க்கிறேன். தூரத்தே அவர் முகம் தெளிவில்லாது தெரிகிறது. சாரத்துடன் அவர் நடக்கிறார். அவருடனான நாட்களின் வாசனையையும் மனது உணர்கிறது. மனிதம் வாழ்ந்திருந்த காலமது. ------- இப்பதிவில் உள்ள துணிவகைகளை நினைவூட்டிய தியாகராசா ராஜ ராஜன் (சுருக்கர்) மற்றும் Vimal Kulanthaivelu ஆகிய கதைசொல்லிகளுக்கு ஆச்சிரமம் தனது நன்றிகளைத் தெரிவிக்கிறது.

ஆசானின் கற்பும் இங்கிலாந்துப் பாராளுமன்றமும்

ஒரு வாரமாக மனம் நன்றாக இல்லை. பொய், பொறாமை, வீண் புகழ்ச்சி விரும்பிகளின் சூழ்ச்சிகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறேன். நேற்று அது உச்சத்தை அடைந்திருந்தது.

நேற்று மதியம்போல் Slm Hanifa அவர்களின் முகப்புத்தகத்தில் அவர் மட்டக்களப்பின் முதுசமும், எனது ஆசானும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னைநாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதர் அவர்களுடன் உரையாடும் ஒரு ஒளிப்படத்தினைக் காணக்கிடைத்தது. ஆனால் அப்போது மனம், அதில் ஒன்றுமளவிற்கு நிம்மதியாய் இருக்கவில்லை.

நேற்றைய பின்மாலைப் பொழுதும் இரவும் மிகவும் வேதனையானவை. இறுதியாக நான் நேரம் பார்த்தபோது அது 01.45 என்று காட்டிக்கொண்டிருந்தது. எப்போது தூங்கினேன் என்பது எனக்குத் தெரியாது.

இன்று காலையுணவருந்தியபோது Slm Hanifa அவர்கள் புதியதொரு ஒளிப்படத்தினை முகப்புத்தகத்தில் தரவேற்றியிருந்தார்.

அங்கு ஒரு சிங்கம் கர்ச்சித்துக்கொண்டிருந்தது.

1976ம் ஆண்டு தை மாதத்தில் இருந்து இன்றுவரை என்மனதில் பதிந்திருக்கும் ஒரு பெரும் குரல் அது. பிரின்ஸ்சேர் என்னும் எங்கள் அதிபரின் குரல். “நீ ஒரு சமூகப்பிராணி“ என்பதை இதயத்தில் அறைந்து அனுப்பிய மனிதர் அவர். இன்றும் இதயத்தை ஊடுருவிப்பாயும் குரல் அவருடையது. இப்போது அவருக்கு வயது 92 என்று நினைக்கிறேன்.

மட்டக்களப்பில் போட்டியிட்ட த.வி. கூ செயலர் அமிர்தலிங்கத்தையே வென்று, மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினராக, இலங்கைப் பாராளுமன்றம் சென்று, அங்கு இலங்கைப் பாராளுமன்றத்தின் பேச்சாளராகவும் கடமையாற்றிவர் அவர்.

அவர் அந்த ஒளிப்படத்தில் ஒரு கதை சொல்கிறார்.

ஒருமுறை இலங்கையில் இருந்து இங்கிலாந்திற்கு இலங்கை அரசின் பிரதிநிதிகள் செல்கிறார்கள். இவரும் இலங்கைப் பாராளுமன்றப் பேச்சாளர் என்ற ரீதியில் அவர்களுடன் செல்கிறார்.

இதற்கிடையில் நானும் ஒரு சிறுகதை சொல்லவேண்டியிருக்கிறது.

எனது அதிபரின் அதிபர் ஆங்கிலேயர், பெயர் Rev. C A Cartman. அவர் தனது அந்திமக் காலத்தில் லண்டனில் வசித்துவருகிறார். அவரைத் தேடியலைந்து பல சிரமங்களின்பின் அவரைச் சென்று சந்திக்கிறார் எனது ஆசான். அவரும் இவரை அடையாளம் கண்டு, மறுநாள் மாலை தேநீர் விருந்திற்கு அழைக்கிறார்.

அன்று மாலை, இங்கிலாந்தின் பாராளுமன்றப் பேச்சாளர், எனது அசானை தொலைபேசியில் அழைத்து ‘நாளை மாலை இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் சார்பில் உங்களை இங்கிலாந்து பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வமான தேனீர்விருந்திற்கு அழைக்கிறேன்’ என்றபோது இவர் இப்படிப் பதிலளிக்கிறார்.

‘உங்கள் அழைப்பிற்கு நன்றி. எனது ஆசான் Rev. C A Cartman லண்டனில் வாழ்கிறார். அவர் நாளை மாலை தேனீர்விருந்திற்கு அழைத்திருக்கிறார். அவரிடம் நிட்சமாக வருவேன் என்று வாக்குறுதியளித்திருக்கிறேன். எனவே என்னால் வரமுடியாது, மன்னியுங்கள்.

மனம், உடல் சோர்ந்திருந்த காலைப்பொழுதில் பார்த்துக்கொண்டிருந்த ஒளிப்படத்தில் எனது பேராசான் இதனைக் கூறியபோது கலங்கியிருந்த எனது மனது தெளிந்தது. புத்துயிர் பெற்றேன்.

கற்பு என்பதற்கு சொல் என்றும் ஒரு பொருள் உண்டல்லவா? சொற் சுத்தம் கொண்ட எனது ஆசான் அச் செய்தியினூடாக பல விடயங்களை புரியவைத்திருந்தார், எனக்கு.

- வலியவருக்கும் அஞ்சாது உண்மை பேசு
- யாராகினும் நிமிர்ந்து நேரிடையாய் பேசு.
- வாழ்வதற்காக சோரம்போகாதே.
- எவராகினும் கொடுத்த வாக்கினை மீறாதே. அது அறம் மீறுவதாகும்.

92 வயதிலும் எனக்குக் கற்பிக்கும் என்னாசான் தாழ்ப்பணிந்தேன்.

என் தவம்செய்தனை உன்னை ஆசானாய் பெற.