6 விரல் தேவதையும் ஒரு விசரனும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நோர்வே தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப்போட்டியின்போது அவசர அவசரமாக சென்றுகொண்டிருந்த ஒரு 5 வயது அழகியை வழிமறித்து:
«அம்மா உங்கட பெயர் என்ன என்று» என்று கேட்டேன். «சொல்லமாட்டேன்» என்றுவிட்டு ஓடினாள்.
மீண்டும் அதே வழியால் அவள் வந்தபோது «ஏன் நீங்கள் நகத்திற்கு lipstic அடித்திருக்கிறீர்கள்» என்று கேட்டேன்.
«போடாங்» என்பதுபோன்று ஒரு நக்கல் பார்வையை வீசிவிட்டுச் சென்றாள்.
மீண்டும் அதேவழியால் வந்த போது «நீங்கள் ஏன் உதட்டுக்கு nail polish போட்டிருக்கிறீர்கள் என்றேன்.
இப்போது என்னை பரிதாபமாக மேலும் கீழும் பார்த்துவிட்டுச் சென்றாள்.
சற்று நேரத்தின்பின் மீண்டும் அகப்பட்டாள் அவள்.
«அம்மா உங்கட கையில் 6 விரல் இருக்கிறது» என்றேன்.
சிங்கம்.. சற்று நிதானித்து, கைவிரல்களை எண்ணியது.
1 2 3 4 5 என்று எண்ணியபின் «உங்களுக்கு ஒன்றும் தெரியாது» என்றாள்.
நமக்குத்தேவை தேவதைகளுடனான உரையாடலே என்பதனால், «கையைக் காட்டுங்கோ» என்றேன். காட்டினாள்.
அவளின் கையைப்பிடித்து வேகமாக எண்ணி 6 என்று முடித்தேன்.
சிங்கம் சற்று யோசித்தது. மீண்டும் எண்ணி 5 விரல்தான் என்றாள்.
நான் மிகவும் ஆறுதலாக எண்ணினேன். இரண்டு என்று சொல்லும்போது முதலாவது விரலைத்தொட்டு எண்ணி 6 என்று முடித்தேன்.
என்னருகில் உட்கார்ந்துகொண்டு நிலத்தில் கையைவைத்து 1 2 3 4 5 என்று எண்ணினாள்.
நான் 6 என்று எண்ணி, மறுகையிலும் 6 எண்ணினேன்.
அதுமட்டுமல்லாது எம்மை கடந்து சென்ற சிலரின் கைவிரல்களை எண்ணி அவர்களுக்கு 5விரல் உங்களுக்கு மட்டும் 6 விரல் என்றேன்.
"அப்பாவிடம் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று துள்ளியோடினாள்.
சற்றுநேரத்தில் திரும்பிவந்தாள். கையில் இனிப்புப் பண்டம் இருந்தது. எனக்கு ஒன்றைத் தந்தாள்.
«அப்பா எனக்கு 5 விரல் என்றார்» என்று கூறியபின் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தாள்.
அவளின் அழகிய சுறுள் முடி, நிரம்பி வழிந்த கன்னம், கன்னத்தில் விழுந்த குழி, கண்களில் ஒளிர்ந்த குழந்தைத்தன்மை, ஓயாத கதைகள் என்பன என்னை ஒரு அற்புத உலகத்தினுள் அழைத்துப்போயிருந்தது. பல காலங்களுக்குப் பின்னான ஒரு அழகழய உரையாடல் அது.
அவளின் தோழிகள் அவளைத் தேடி வந்தார்கள். அவர்களுக்கு எத்தனை விரல்கள் என்று எண்ணச்சொன்னாள்.
அவர்களில் ஒருத்திக்கு 7 விரல் என்று எண்ணிக் காட்டினேன். இல்லை 5 விரல்தான் என்று என்னுடன் சண்டைபோட்டார்கள்.
அப்புறமாய் விளையாடப்போகிறோம் என்றுவிட்டு எழுந்துபோனார்கள்.
என்னைக் கடந்து சென்ற அந்த முதலாவது பெண்குழந்தை சற்றுத்தூரம் சென்றபின் என்னைநோக்கி ஓடிவந்தாள்.
«என்னம்மா?» என்றேன்.
«ஏன் உங்களுக்கு தலையில் முடி இல்லை» என்று ஒரு கேள்வியை சாதாரணமாக வீசிவிட்டு எனது பதிலுக்காகக் காத்திருந்தாள்.
நான் இப்போதும் அதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்