தமிழன் முன்னேறியிருக்கிறானா?

அண்மையில் எனது நண்பரின் குடும்பநண்பரான சிங்களவர் ஒருவரை  கொழும்பில் சந்திக்க நேர்ந்தது.

90களில் மட்டக்களப்பின் பிரபல தளபதியொருவர் பலவந்தமாக  இயக்கத்தில் ஆட்களை சேர்த்த காலத்தில் அவர்களிடம் இருந்து தனது மூத்த மகனைக்காப்பாற்ற, கொழும்பில் இருந்த மேற் கூறிய சிங்களவரின் வீட்டில் தங்கவைத்திருக்கிறார்கள் எனது நண்பரின் பெற்றோர்.  அதற்கு முன்னான காலத்திலிருந்தே அவர்கள் நண்பர்களாய் இருந்திருக்கிறார்கள்.

பலதையும் பேசிக்கொண்டிருந்தோம். அவரின் வீதியில் பல தமிழர்கள்  வாழ்கிறார்கள். அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். யுத்தகாலத்தில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை பெரும்பான்மை சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பதனால் அவரால் செய்து கொடுக்கமுடிந்திருக்கிறது.  பலரை போலீஸில் இருந்து வெளியே எடுத்துவிட்டிருக்கிறார். வெளிநாட்டு வீசாக்களுக்கு போலீஸ் அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக்கொடுத்திருக்கிறார். மிகவும் கெடுபிடியான நாட்களில் தனது வீட்டிலும் இளைஞர்களை தங்கவைத்து உதவி புரிந்திருக்கிறார்.

மனிதனுக்கு மனிதத்தன்மையே முக்கியம். இனம், மொழி, மதம் கடந்து மனிதன் மனிதத்தன்மையுடன் வாழவேண்டும் என்றார்.

நாம் பேசிக்கொண்டிருக்கும் போது என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டார்:

தனது வீட்டிற்கு முன்னால் வயதான தமிழ்த் தம்பதியர் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் தன்னிடம் பேசும் போது கூட அவர்களின் முகங்களில் ஒருவித மகிழ்ச்சியும் தெரிவதில்லை என்றும், ஏனைய தமிழர்களுடன் முகம்கொடுத்து பேசுவதில்லை என்றும், ஒரு நாள் அவர்கள் தாம் யாழ்ப்பாணத்தில் உயர்ந்த சாதி என்றும் ஏனையவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறியதாகவும் அதன் போது அவர் அவர்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனக்கு அவர்கள் கருத்தில் உடன்பாடில்லை என்று கூறியதாகவும் கூறினார்.

அதன் பின் என்னிடம் நீ அவர்களின் கருத்தை ஆதரிக்கிறாயா? என்றார். நான் இல்லை  என்றும், ஆனால் அவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் கூறினேன். காரணம், அவர்களின் சிறுபிராயக் காலங்களில் (40 - 50 களில்) இது ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது. அவர்களும் அதே சிந்தனையில் வளர்ந்தவர்கள் என்பதால் அவர்களும் இப்படி இருக்கிறார்கள்  என்றும் அவர்களின் சிந்தனையோட்டத்தை இந்த வயதில் மாற்றிக்கொள்வது கடினம் என்றும் கூறினேன். அதற்கு அவரோ இப்பிரச்சுனை இப்போதும் வடக்கில் பெரும்பிரச்சனையாக இருக்கிறதாமே என்றார்.
நான் மௌனமாய் உட்கார்ந்திருந்தேன்.

பின்பு 50 - 60 களில் தீண்டாமைக்கொடுமையினால் தமிழர்கள் புத்தசமயத்தை தழுவி கல்விகற்றது,  தீண்டாமைக் கொலைகள், கல்விமறுப்பு ‌போன்றவையும் இடம்பெற்றது என்றேன்.

ஏஹம உனாத?  அப்படியும் நடந்ததா? என்று ஆச்சர்யப்பட்டார். ஆம் என்பது போல் தலையாட்டினேன்.

சற்று நேரத்தின் பின் அவரே, வெளிநாடுகளில் இப் பிரச்சனை இருக்கிறதா என்றார். இல்லை என்று என்னால் கூறமுடியாது ஆனால் நாம் விரும்பத்தாகத அளவுக்கு அங்கும் இப்பிரச்சனை இருக்கிறது, ஆனால் இரண்டாம் சமுதாயத்தினர் இதை பெரிதுபடுத்துவதில்லை என்பது எனது கருத்து என்றேன்.

பொஹோம சந்தோசய், ஏகதமய் மனுஸ்யகம,  (மிக்க மகிழ்சி அது தான் மனிதம் என்றார்)

அவரிடம் இருந்து வெளியேறிய போது தமிழன் முன்னேறியிருக்கிறானா? என்று நான் என்னைக் கேட்டுக்கொண்டேன். மனம் ஏனோ மகிழ்ச்சியடைய
மறுத்தது.


5 comments:

  1. Thamilaridam maddumalla sinkalavaridamum sasthi pirachana undu. Athe pol muslim kalidam idappirachana ( pirathesam, mavaddam) undu.

    Thamilaridam athikamaka undu enpathu unmai

    ReplyDelete
  2. நல்லதொரு சந்திப்பு... பதிவாகித் தந்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    /// மனிதனுக்கு மனிதத்தன்மையே முக்கியம். இனம், மொழி, மதம் கடந்து மனிதன் மனிதத்தன்மையுடன் வாழவேண்டும் என்றார். ///

    இதற்கு மேல் என்ன வேண்டும்...?

    ReplyDelete
  3. விரிவான சிறப்பான பதிவு நண்பா!மனிதம் நிமிர்ந்தால் இனம் மதம் மொழி எல்லாமே வாழும்.வாழ்த்துக்கள் சொந்தமே!!!!சந்திப்போம்.


    இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

    ReplyDelete
  4. ///அவரிடம் இருந்து வெளியேறிய போது தமிழன் முன்னேறியிருக்கிறானா? என்று நான் என்னைக் கேட்டுக்கொண்டேன். மனம் ஏனோ மகிழ்ச்சியடைய
    மறுத்தது.
    ///

    இந்த விடயத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்னேற்றம் கண்டிருக்கின்றனர் அதை நினைத்து சந்தோஷபடுவோம்..

    ReplyDelete

பின்னூட்டங்கள்