மனிதர்களைத் தாக்கும் Diptera உயிரினம் (உண்மைக் கதை)


காலை தூக்கத்தால் எழும்பும் போதே மூக்கு நுனியில் இருந்து குட் மோனிங் சொன்னது அந்தக் கொசு. நானும் இது ஏதோ மற்ற கொசுக்கள் போன்றது என்று நினைத்து கையால் கலைத்து விட்டுத் திரும்பி படுத்தேன். ந்ஞய்ய்ய்ய் என்று காற்றில் ஒரு பல்டி அடித்துவிட்டு காதில் போய் ஒய்யாரமாய் லான்ட் பண்ணியது. நித்திரை அலுப்பிலும், எரிச்சலிலும் காதுப்பக்கமாய் ஒரு அறை ஒன்றை விட்டுக்கொண்டேன். கொசு தாக்குதலுக்கு தப்பிக்கொண்டது, எனது காதும், கையும் நொந்தது தான் மிச்சம்.

போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டு 10 நிமிட சந்தோச நித்திரையை அனுபவித்துவிட்டு எழும்பியிருந்து சோம்பல் முறிக்கிறேன். ந்ஞய்ய்ய்ய் என்று என்னைச் சுற்றி வட்டமடிக்கத் தொடங்கியது அந்தக் கோதாரி விழுந்த கொசு. தலையை ஆட்டாமல் கண்ணை வலது, இடது, மேல்,கீழ், அங்கால், இங்கால் என்று பார்த்தால் கொசுவை காணவில்லை. ஆனால் ந்ஞய்ய்ய்ய் என்ற சத்தம் மட்டும் எங்கிருந்தோ கேட்டபடி இருந்தது. பக்கத்தில இருந்த மேற் சட்டையை எடுத்து திடீர் தாக்குதலுக்கு தயாராக காதுகளையும் கையையும் சரியான கோடினேசனில் தயாராக வைத்துக் கொண்டிருந்தேன். இப்போது ந்ஞய்ய்ய்ய் என்ற சத்தம் நின்று விட்டிருந்தது.

கொஞ்ச நேரம் காதை கூர்மையாக்கி மௌனித்து இருந்தேன். எனது தாக்குதல் திட்டத்தை அறிந்து கொண்டதோ என்னவோ கொசுவின் சத்தத்தை காணவில்லை. சரி போகட்டும் என்று கட்டிலில் கையை ஊன்றி எழும்பி
நின்றது தான் தாமதம் மூக்குக்கு முன்னால் ரெண்டு பல்டி அடித்து பறந்தது
அந்தக் கொசு.

ஆத்திரத்தில மேற்சட்டையை 2 - 3 தரம் அங்கும், இங்கும் என வீசி அடித்தேன். கொசுவின் சத்தம் நின்றிருந்தது. ஆனால் நான் வெற்றிப் புன்னகையை புன்னகைக்க முதலே மீண்டும் ந்ஞய்ய்ய்ய் என்ற சத்தம் கேட்டது. எனக்கு வெறுத்து விட்டது. கேவலம் ஒரு கொசு என்னை இந்தப் பாடு படுத்துகிறதே என்று.

எனினும் இந்தக் காலை நேரம் அதனோடு சண்டை பிடிக்கும் மனநிலை எனக்கு இருக்கவில்லை. சில வேளைகளில் சோதனைகள் நான் அமைதியாக இருந்தாலும் வலியவே வந்து ஒட்டிக் கொள்ளும். எனது ராசி அப்படிப்பட்டது. அவ்வாறு தான் இதுவும் என வலிய வந்த சோதனையையும் எனது தோல்வியையும் ஒப்புக் கொண்டு முகத்தை கழுவும் நோக்குடன் பாத்ரூம் போக ஆயத்தமானேன். என் பின்னால் மீண்டும் ந்ஞய்ய்ய்ய் சத்தம் கேட்டது. சிலை போல் நின்று பார்த்தேன். என்னே ஆச்சரியம்! ந்ஞய்ய்ய்ய் சத்தமும் அப்படியே நின்றது. சற்று மெதுவாய் எல்லா இடமும் பார்த்து சத்தம் நின்றவுடன் ஓடிப் போய் பாத்ரூம்க்குள் பாய்ந்து கதவை அடித்துச் சாத்திக் கொண்டேன். அப்‌‌போழுதும் மனம் சமாதானமாகவில்லை. நெஞ்சு பட பட என்று அடித்துக்கொள்ளும் சத்தம் காது வரை கேட்டது. சத்தம் செய்யாமல் மெதுவாய் வெளியே எட்டிப் பார்த்தேன், காதையும் கூர்மையாக்கினேன். கதவுக்கு வெளியில் ந்ஞய்ய்ய் சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. அப்பாடா என்று மூச்சு விட்டபின் ஏனைய வேலைகள் எல்லாவற்றையும் முடித்து விட்டு தேத்தண்ணி குடிப்போம் என்று நினைத்தேன் (அதற்கிடையில் கொசுவின் ஞாபகம் மறந்து விட்டிருந்தது)

கேத்திலை எடுத்து பைப்பைத் திறந்து தண்ணி நிரப்பும்போது சொல்லி வைத்தாற் போல் ந்ஞய்ய்ய்ய என்ற சத்தத்துடன் தண்ணீர்ப் பைப்பில் வந்து நின்றது அந்த  நம்பியார் கொசு. சரி அது என்ன தான் செய்கிறது என்று உற்றுப் பார்த்தேன்.

அது நின்றபடி தன் முன்னம் காலைத் தூக்கி தனது முகத்துக்கு முன்னால் வைத்து ஏதோ செய்தது. அதன் செய்கை எனக்கு, அது என்னைப் பார்த்து (கொசு) விசிலடிப்பது போலிருந்தது. வலது கையில் கேத்தல் இருந்ததால் துணி எடுத்தும் அதனை அடிக்க முடியவில்லை. கேத்திலை வைத்து விட்டு திரும்பினால் அது தான் ஏதோ பெரிய பிஸ்தா என்ற கணக்கி்ல் அதே இடத்திலேயே இருந்தது. மெதுவாய் துணியை எடுத்த போது தான் அந்த கோதாரி விழுந்த பெருஞ் சந்தேகம் எனக்கு வந்து தொலைத்தது.

கொசுவுக்கு 4 காலா, 6 காலா?..

கொசுவுக்கு பின்னால் இருந்த ஜன்னலில் இருந்து  சூரிய வெளிச்சம்
வந்து கொண்டிருந்ததால் கொசுவின் தோற்றம் எனக்கு நன்றாகவே தெரிந்தது. சரி என் அழகிய காலையைக் கலைக்கும் இதன் காலையாவது எண்ணிப்பார்ப்போம் என்று என் கண்களைக் கொசுவை நோக்கி போகஸ் பண்ணி 1, 2, 3 என்று மெதுவாய் கால்களை எண்ணிக் கொண்டு போகும் போது ந்ஞய்ய்ய்ய் என்று மாயமாய் மறைந்து விட்டது

கொசு. ஏற்கனவே இருந்த கோபம், எனது அறிவுப் பசியை தீர்க்காத மற்ற கோபம் எனஎனக்கு அந்த கொசுவின் மேல் கோபம் கோபமாய் வந்தது. துணியை சுழட்டிய படியே கொசுவை தேடினேன்...மாயமாய் மறைந்தே விட்டிருந்தது அது...சரி வரட்டும் என்று கறுவிக் கொண்டு தேனீரை கலந்து குடிக்கலானேன்

தேனீரை குடிக்கும் போது தான் கவனித்தேன் கொசு நானிருந்த வீட்டை தனது வீடு என்று நினைத்ததோ என்னவோ சோபாவில் தொடங்கி கதிரை, ரீவி, ‌சாப்பாட்டுமேசை, அது இது என்று எல்லா இடத்தையும் ஏர்போட்டாக நினைத்து டேக் ஓப், லான்டிங் செய்து கொண்டிருந்தது.

திடீர் என எங்கிருந்தொ இன்னொரு கொசுவும் வந்து சேர்ந்து கொண்டது. அது நமது கொசுவின் எதிர்ப்பாலாக இருக்க வேண்டும்.  நம்து கொசுஅதற்குப் பின்னாலயே பறந்து திரிந்தது. ஆனால் அந்தப் புதிய கொசு நமது கொசுவை கண்டுகொள்ளவேயில்லை. பாவமாயிருந்தது எனக்கு.

தேனீரை வாய்க்கருகில் கொண்டு போகும் போது பார்த்தேன். திரும்பவும்ந்ஞய்ய்ய்ய என்ற சத்தத்துடன் முன்பு தண்ணீர்ப் பைப்பில் நின்ற மாதிரி மீண்டும் வந்து என் முன்னால் நின்றது. சரி கால்களை எண்ணுவம் என்று நினைத்து குனிந்து கண்களை போகஸ் பண்ணிக் கால்களை எண்ணினேன் 1,2,3,4,5,6 அப்பாடா

சந்தேகம் தீர்ந்தது. கொசுவுக்குஆறு கால்கள்!

கொசு பார்க்க அழகாகத் தான் இருந்தது...வெள்ளை நெட் போன்றதொரு தோலினால்செய்யப்பட்ட இறக்கைகள், அதற்கு பலம் சேர்க்க நரம்புகள், மினுமினுப்பானதோல், மீசை மாதிரி ஏதோ வாய்க்கு பக்கத்தில் நீட்டிக் கொண்டிருந்தது. நமீதா போல் கவர்ச்சியாக இல்லாவிட்டாலும் ஓரளவு கவர்ச்சியாகவே இருந்தது நமது கொசு.

இந்த கதை நடந்த பின்பொருநாள் வீக்கிபீடியாவில் செய்த கொசு ஆராய்ச்சியில் அவை Diptera என்னும் உயிர்க்குழுமத்தை சேர்ந்தது என்றும், உலகத்தில் 130.000 வகைக் கொசுக்கள் உள்ளன என்றும் எழுதியிருந்தார்கள். கொசுவை ரசித்ததில் அதன் மேலிருந்த கோபம் போய் இப்போது நட்பு வளர்ந்திருந்தது. கையை கொசுவின் அருகால் விசுக்கினேன் ந்ஞய்ய்ய்ய என்ற சத்தத்துடன் மீண்டும் அது மறைந்து போயிற்று.

நானும் வெளியில் போய் வந்து மாலை நேரம் களைத்துப்போய் சோபாவில் சற்று அயர்ந்து கண்ணை மூடுவோம் என்று நிதைத்த போது ந்ஞய்ய்ய் என்ற ஒலியுடன் தனது இருப்பை மீண்டும் உணர்த்தியது கொசு.

கால் பெருவிரல் நுனியில் வந்தமர்ந்தது. காலை ஆட்டியவுடன் வேறெங்கோ போவதுபோல பாவ்லா காட்டிவிட்டு அதே காலில் மீண்டும் வந்தமர்ந்தது. எரிச்சலில் மற்றைய காலால் தட்டினேன். இப்ப மற்ற பெருவிரலிற்கு தாவியது. வெக்கை தாங்க முடியாது கூலரையும் இயக்கி  ஆறுதலாயிருப்போம் என்றால் இந்த  கொசு தேவைக்கதிகமாக எனது பொறுமையை சோதித்தபடியே இருந்து.

காலை ஆட்டாமல் இருந்தால் வந்து காலில் குந்தி இருந்து அரியண்டம் தந்தது. இப்ப கால் இரண்டையும் ஆட்ட வேண்டிய கட்டாயம் எனக்கு!  எனவே, ஆட்டிக்கொண்டிருந்தேன். கொசுப்பிள்ளைக்கு இருக்க இடம் இல்லாமல் லான்ட் பண்ண அனுமதி கேட்டு ‌கிடைக்காத போது வானில் வட்டமிடும் விமானம்போல எனது காலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தது. அது எனக்கு மகிழ்ச்சியைச் சற்று நேரம் தந்தாலும் கால் நோகத் தொடங்கியதால் காலாட்டத்தைநிறுத்தவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இதற்கென்றே காத்திருந்தது போல் கொசு லான்டிங் பெமிசன் கிடைத்த விமானம் மாதிரி உடனேயே காலில்குந்திக் கொண்டது. சினத்தோடு எழும்பி கையை விசுக்கித் துரத்தினேன்.என்னை எழுப்பியதில் திருப்திப் பட்டதோடு அது எங்கேயோ போய் ஒளிந்து கொண்டது.

அப்பாடா தொல்லை விட்டது என்று பின்னால் சரிந்து வசதியாய் காலை நீட்டி கண்ணை மூடினேன். என்னையறியாமல் நித்திரையினுள் போகும் நேரம் பார்த்து ந்ஞய்ய்ய் என்று கொண்டு கையில் வந்தமர்ந்தது.கலைக்க கலைக்க வந்து வந்துகுந்தி எரிச்சலை ஏற்படுத்தியது. நித்திரைக் கலக்கமும் இந்த கொசுவின் இம்சையும் சேர்ந்து எனது நிதானத்தை காற்றில் கரைக்க, இப்போது இக் கொசுவை கொன்றே தீர்வது என்ற தீர்மானத்தோடு பக்கத்தில் இருந்த  பத்திரிகையை எடுத்தவாறு எழும்பினேன். இப்போது கொசு சாப்பாட்டு மேசையில் குந்தியிருந்தது.

மெதுவாய் பூனை போல் அடி மேல் அடியெடுத்து வைத்து மேசையை நெருங்கி மெதுவாய் கையை ஓங்கி கொசுவை நோக்கி மெதுவாய் இறக்கினேன்.. தன் தலைக்குமேலே இருக்கும் ஆபத்தை உணராமல் நிம்மதியாய் இருந்தது போல இருந்தது அக் கொசு. சடார் என்று விட்டேன் ஒரு அடி. பின் ஒரு வெற்றிப் பெருமிதத்தோடு வேட்டைக்காரன் குறி வைத்து விழுத்திய தனது மிருகத்தை தேடுவது போலநானும் அந்தக் கொசுவை தேடிய போது, அது மீண்டும் ஒரு சேதமும் இல்லாமல் ந்ஞய்ய்ய்ய என்ற சத்தத்துடன் பறந்து போவதைக் கண்டேன்..

இப்போது,எனது ஆயாசம் எல்லாம் மறைந்து போய் மனம் எல்லாம் எரிச்சலாகி இப்போது கொசுவே எனது எண்ணமெல்லாம் நிறைந்திருந்தது.அது மேசையில் இருந்த ஏதோவொரு சாப்பாட்டுத் துகளின் மேல் குந்தியிருந்தது இப்போது. மீண்டும் பதுங்கி ஒரு கொரில்லா தாக்குதலுக்குத் தயாரானேன் நான்.இந்த முறை நான் கையோங்க முதலே பறந்து விட்டது. களைப்பும் ஆயாசமும் தோல்வியுமாய் இருந்த மனசு சரி பறவாயில்லை போய் படு என்றது. இருப்பினும் கொசு வந்து நித்திரையைக் கெடுக்கும் என்றது சாத்தான் மனது. கொல் கொல் என்று மேலும் அது உசுப்பேத்தியது.

எனக்கு இருந்த ஆத்திரத்திற்கு அந்த கொசுவை அம்மியில் வைத்து அரைத்திருப்பன். என்னால் தூங்க முடியவில்லை. தேடினேன் தேடினேன்.. வீட்டின் எல்லை வரை தேடினேன் கொசுவை.  இப்போது அது சோபாவின் கைப்பிடியில் குந்தி இருந்தது. தூரத்திலிருந்தே குறிபார்த்து எறிந்தேன் ஒரு பத்திரிகையை. ஏவுகணை மாதிரிப் போன பத்திரிகையில் இருந்து சின்னதோர் பல்டி அடித்து மீண்டும் தப்பித்து பறந்து போய் பூமரத்தில் குந்தியிருந்து என்னைப் பார்த்தது (என்று நினைக்கிறேன்). நானும் அடுத்த தாக்குதலுக்கு தயாராக மற்றுமொரு பத்திரிகையை சுருட்டி எடுத்துக் கொண்டேன். மெதுவாய் கொசுவை நெருங்கியபோது முன்பொரு நாள் யாரோ ஒரு அறிவுக்கொழுந்து கூறிய ”கொசுவை அடிப்பதென்றால் முன்பக்கத்தால அடிக்கோணும்” என்னும் அறிவுரை அசரீரி போல் காதுக்குள் ஒலித்தது. ‌சரி முன்னாலேயே அடிப்போம் என்று காத்திருந்து, சமயம் பார்த்து விட்டேன் ஒரு அடி... கொசுவுக்குப் பட்டதோ இல்லை‌யோ ஆனால் பூக்கண்டுக்கு பட்டு ‌பூ தெறித்து விழுந்தது. கொசுவை தேடினேன் அது பக்கத்து பூமரத்தில் ஜாலியாக குந்திருந்தது.

அப்போதுதான் அந்த எண்ணம் வந்தது. கதவை  திறந்துவிட்டு கொசுவை வெளியே கலைப்போம் என்று. கதவை திறந்து கலைக்க தொடங்க முதலேயே ந்ஞய்ய்ய் என்ற சத்தத்துடன் என்னை மூன்று தரம் சுற்றிப் பறந்து விட்டு வெளியே போனது அந்தக் கொசு.

அப்பாடா என்று போய் படுத்தேன்... இப்ப கொசு இல்லாதால் குடிவந்திருந்தது

”ந்ஞய்ய்ய்” என்றதொரு தனிமை.


.

2 comments:

  1. நுளம்புத்தொல்லையா, உடனே அழையுங்கள் "சஞ்சயன், கொசு விரட்டல் சேவை , 123232232"

    ஒரு சின்ன சம்பவத்தை வடிவாக எழுதியுள்ளீர்கள். ரசித்தேன் நண்பரே. (இப்ப உள்ள 3 'ரசித்தேன்' இல், ஒன்று என்னுடையது :-)

    ReplyDelete
  2. >அப்பாடா என்று போய் படுத்தேன்... இப்ப கொசு இல்லாதால் குடிவந்திருந்தது
    ”ந்ஞய்ய்ய்” என்றதொரு தனிமை.

    அப்ப உங்களுக்கு tinnitus உண்டா?

    ReplyDelete

பின்னூட்டங்கள்