ஈரமான மனிதர்களும் எனது முட்டாள்த்தனங்களும்

வாழ்வில் எத்தனையோ தடவைகள் மனிதர்களின் புற அமைப்பையும் அழகையும் கொண்டு அவர்களை கணிக்கும் தவறைச் செய்திருக்கிறேன். ஆனால் வயது ஏற ஏற அத் தவறை செய்யாதிருக்க நான்  விரும்பினாலும் அது முற்றிலும் சாத்தியமாயில்லை என்பதை சில வாரங்களுக்கு முன் நடந்ததோர் சம்பவம் முகத்திலறைந்து சொல்லிற்று.

சில வாரங்களுக்கு முன் நான் நோர்வேக்கு வந்த ஆரம்ப வருடங்களில் கண்டிருந்த ஒருவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. 1990 களின் ஆரம்பத்தில் அவரை நான் கண்டிருக்கிறேன். ஆனால் பேசிப் பழகியதில்லை. பேசிப்பழகும் ஆர்வத்தையும் அவரின் அந்தக்காலத்து நடவடிக்கைகள் தரவில்லை. அந்தளவுக்கு மிகவும் நல்லவராகவே தென்பட்டார் அந்நாட்களில், அவர். அப்போது அவரின் வயது 17 - 18 ஆக இருக்கலாம். கண்ணை விட மிகச் சிறியதாய் ஒரு கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பார், தலையைக் குனிந்து, கண்ணாடிக்கு மேற்பகுதியினால் பார்க்கும் அவரின் பார்வையை பலர் திட்டியபடியே செல்வதை கண்டும் கேட்டுமிருக்கிறேன்.

துஸ்டனைக் கண்டால் தூர விலகு என்னும் கொள்கையில் இருந்தவர்கள் இவரைக் காண்பதற்கு முன்பே விலகிப்:போனார்கள். அடிதடிகளின் போது இவர் இல்லாதிருந்தால் அந்தச் சண்டைக்கு மரியாதை அற்றிருந்தது. பேட்டை ரௌடி என்னும் பதம் அவருக்காகவே உருவாக்கப்பட்டதோ என்னுமளவுக்கு அச்சொல்லுடன் மிகவும் நெருக்கமாயிருந்தார் அவர், அந் நாட்களில்.

நான் 1990களின் ஆரம்பத்தில் வடமேற்கு நோர்வேக்கு இடம் பெயர்ந்த பின்பும் இவரின் வீரபிரதாபங்கள் அவ்வப்போது காற்றில் என் காதுக்குள் வந்தபடியே இருந்தன. ஒரு வித நம்பிக்கையீனமான உணர்வையே அவருடனான சந்திப்புக்களும், அவருடைய நடவடிக்கைகளும் எனக்கு தந்திருந்ததனால் அவரைப் பற்றி எனக்குள் ”ஒரு விதமான” எண்ணமேயிருந்தது.

ஏறத்தாள 16 வருடங்களின் பின்பு அவரைக் காண்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் அவரும் நானும் அவரவர் வாழ்வின் முக்கியமான காலங்களை கடந்தும், 16 வருடங்கள் முதிர்ந்துமிருக்கிறோம். அன்று முதன் முறையாக அவருடன் கை குலுக்குகிறேன்.  அவர் என் கையைப்பற்றி அழுத்திய கணத்திலிருந்தே எனக்குள் இருந்த அவரைப் பற்றிய தப்பிப்பிராயங்கள் கரையத்தொடங்கியிருந்தன. வார்த்தைகளை தேடி எடுத்து மரியாதையில் நனைத்துப் பேசினார். அந்த முதல் நாளின் முதல் நிமிடங்களிலேயே என் மனச்சாட்சி தனது சாட்டையை என் மீது வீசத் தொடங்கியிருந்தது.

நாம் ஒரு குழுவாக ஒரு செயலைச் செய்ய அங்கு கூடியிருந்தோம். எனது பெயரைக் கேட்டறிந்தார்.  என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் உங்களை எனக்குத் தெரியாது என்று அவர் கூறிய போது அவரின் நகைச்சுவையுணர்வை உணர்ந்து கொண்டேன். அடுத்த வந்த பல நாட்களில் அவரிடம் என்னைக் கவர்ந்த அவரின் பல நடவடிக்கைகளில் அவரின் ”டைமிங் நகைச்சுவை”யும் ஒன்று.

நாம் சேர்ந்தியங்கவேண்டிய திட்டத்தின் காலம் ஏறத்தாள ஒரு வாரகாலமாய் இருந்தது.  நாம் திட்டமிடும் பணியில் இருந்த போது அவர் தன்னால் எது முடியும், எது முடியாது என்பதை மிகத் தெளிவாகத் அறிவிக்கும் அவரின் தெளிவு என்னை மிகக்கவர்ந்தது. நாம் திட்டமிடலுக்கு செலவளித்த நாட்களில் ஒவ்வொரு நாளும் தன்னைப் பற்றி புதிதாய் ஏதோ ஒன்றை எனக்கு அவர் அறிவிக்கிறார் போலவே உணர்ந்தேன். எமது திட்டம் நடைபெற்ற வாரத்தில் அவரால் செய்யக் கூடிய எந்த வேலையையும்ஒரு வித கண்டிப்புடன் செயது முடித்தார்.  நேர காலம் இன்றி ஓடி ஒடி உதவினார். மாலையில் அவரின் பணி முடிவுற்றதும் அவரின் நடை உடை பாவனை என்பன மாறி மிகவும் அன்னியோன்யமாக பழகினார்.

நாம் சேர்ந்தியங்கிய திட்டத்தில் உலகத் தமிழர்கள் மத்தியில், அகில இந்திய  ரீதியில் மிக மிகப் பிரபலமான மனிதர்கள் பங்கு பற்றினர். அவர்களுடன் நாம் சேர்ந்தியங்கிய அந்த 5 - 6 நாட்களில் அப் பிரபலங்களே மூக்கில் விரலைவைக்கும் அளவிற்கு அமைந்திருந்தது அவரின் நடவடிக்கைகள். அவரின் நடை உடை பாவனைகள், நகைச்சவையின் உச்சம், பாடும் திறமை, மனிதர்களுடன் பழகும் பண்பு என்பன  அப் பிரபலங்கள் அவரின் விசிரிகளாகுமளவிற்கு இருந்தன.

ஒரு நாள் அவரின் வாழ்வின் கதையை அவர் மூலமாகவே கேட்கக் கிடைத்தது. அவற்றை வேறு சிலருடன் பகிந்த போது அவர் கூறியவை முற்றிலும் உண்மை எனவும் புரிந்தது. அவரின் இளமைக்காலம் "கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை" என்பதாய் இருந்திருக்கிறது. நோர்வே வந்த பின்பும் துன்பியல் வேறு விதத்தில் தொடர்ந்திருக்கிறது அவரை. 30 வயதினை தாண்டு முன்பே மிகவும் கசப்பான வாழ்வினை தாண்டியும் அதற்கு தேவைக்கதிகமான விலையையும் கொடுத்திருக்கிறார்.

இவரைப் பற்றி இவ்வளவு அறிந்ததும் என்னிடமிருந்த எண்ணங்களை மாற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் தன் வாழ்வனை கூறிய போது கூறாத ஒரு விடயத்தை வேறு ஒருவர் மூலமாக அறிந்த போது நான் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவேயில்லை.”அவன் தான் மனிதன்” என்னுமளவிற்கு அமைந்திருந்தது அவரின் செயல்.

அவரின் குடும்பத்தினை சில வாரங்களுக்கு முன் சந்திக்கக் கிடைத்தது. எனது பூக்குட்டியைப் போன்றதொரு பெண்குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும், மனைவியுமென மிகிழ்ச்சியாய் இருந்தது அவரின் குடும்பம்.  அவருக்கு திருமண ஆசை வந்த போது இலங்கைக்குச் சென்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்திருந்த ஒரு குழந்தைகள் பராமரி்ப்பு இல்லத்தில் வறமையின் காரணமாய் வாழ்ந்திருந்த ஒரு பெண்ணை திருமணம் இவர் செய்திருக்கிறார். இவரின்  நண்பரும் இவரைப் பின்பற்றியிருப்பது அவரின் நண்பரும் வித்தியாசமானவர் என்பதை அறிவிக்கிறது.

அவரின் அந்தச் செயலை அறிந்த அன்றிரவு அவரைப் பற்றி நினைத்திருந்தேன். வாய்ப்பேச்சில் வல்லவர் வாழும் இந்த உலகில் இப்படியும் மனிதர்களா என்பது ஆச்சர்யமாயிருந்தாலும் இவர் அப்படி செய்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இப்படியான முடிவுகளை எடுத்து அதை சாதிக்க எத்தனை மனப்பக்குவம் வேண்டும் என்றெல்லாம் எனது சிந்தனையோடிக்கொண்டிருந்து.

நான் கணடு ஒதுங்கிப்போன அந்த இளைஞனுக்குள் இத்தனை பக்குவமா என்று அதிசயத்திருந்தேன். அந்த ரௌடியிசத்தினுள் எத்தனை மென்மையிருநதிருக்கிறது. கல்லுக்கள்ளும் ஈரமிருக்கிறது என்பதும் அப்போது தான் புரிந்தது. வெட்கிப்போனேன் எனது முட்டாள்த்தனத்தையெண்ணி.

தற்போதுஅவர் ஒரு திரைப்படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார் என்றறிகிறேன். அது பற்றி கேட்ட போது அடக்கமாய் ”ஆம” என்று தலையாட்டினார். என் மனமெல்லாம்  எதற்காகவோ ஏகாந்தமாய் மாறியிருக்க ”நம்பியார் சாமி”  என்றழைக்கப்படும் வில்லன் நம்பியார் மனதில் வந்து போனார்.

அகத்தின் அழகே அழகு என்று எங்கோ அறிந்ததன் உண்மை இப்பொது தான் புரிந்திருக்கிறது. இப்போதாவது எனக்குப் புரிந்ததில் மகிழ்ச்சியே.

இன்றைய நாளும் நல்லதே.


.

1 comment:

பின்னூட்டங்கள்