முதுமையின் பேராசை
















ஆண்டு 2030ஐ நெருங்குகையில்
ஏறாவூர் - மட்டக்களப்பு அருகில்
கடல் கண்ணுக்கு தெரியுமிடமொன்றில்

ஒரு ஆர்ப்பாட்டமில்லாத சிறு தென்னந்தோட்டம்
ஆங்காங்கே மா, பாலா என மரங்கள்
இவற்றின் நடுவே
திண்னையுடன் கூடிய ஓலையால் வேயப்பட்ட சிறு வீடு
வீட்டினுள் ஒரு சிறு மேசையும், சில கதிரைகளும்
மேசையில் நிறையப் புத்தகங்களும், ஓரு கூஜா குளிர் நீரும்,
கண்ணுக்குத் தெரியுமிடங்களில் என் இளவரசிகளின் படங்களும்

சுவற்றில் பல்லிகளும்

படுத்தெழும்ப ஒரு கயித்துக்கட்டில்
குசினிப்பக்கத்தில் சில சட்டி பானைகள்
திண்ணையில் ஒரு சாய்மனைக்கதிரை
அதனருகில் வெத்திலையும், பாக்கும். சுண்ணாம்பு, ‌புகையிலை தவிர்த்து

வெளியில் ஒரு கப்பியுடன் ஒரு கிணறு
அதனருகில் உடுப்புக்காய ஒரு கொடி
அதற்கங்கால் ஒரு கக்கூஸ்
அருகிலேயே குப்பை எரிக்க, தாட்க ஒரு கிடங்கு

கிணற்றருகில் வாழைகள்
வாசலில் மல்லிகை, மற்றும் பல பூக்கள்
கால் புதைந்து நடக்க மண்
நட்பாய் பேசி நடக்க, சேர்ந்து வாழ இரண்டு நாலுகால் நண்பர்கள்
அடிக்கடி ஓடிமறையும் அணில்கள்
கேட்டு மகிழ பறவைகளின் ஒலிகள்

கடந்து போகும் போது நெஞ்சிலே கைவைக்க
சற்று தூரத்தே ஒரு மரத்தடிக்கோயில்
மாலையில் குந்தியிருந்து போழுதைப்போக்க ஒரு மைதானம்
அவ்வப்போது போய் வர ஆஸ்பத்திரி, சலூன்
வந்து போக மனிதக்குணம் கொண்ட மனிதர்களும், நட்புகளும்
இரைமீட்க நீண்ட இரவுகள்
தேவைப்படின் சற்று சோமபானம்

இப்படியாய் இருக்கவேண்டும் என் முதுமை

அய்யய்யோ
மறந்து விட்டேன் முக்கியமானவற்றை


உலகை என்னுடன் இணைக்க
ஒரு மடிக்கணணி, இணையஇணைப்பு, ஒரு கைத்தொலைபேசி

மிக முக்கியமாய்
என்னைத் தேடி வராத வெள்ளை வான்.

இப்படியோரு பேராசையிருக்கிறது எனக்கு.



இன்றைய நாளும் நல்லதே


.

1 comment:

  1. நான் உயிரோடு இருப்பேனோ தெரியாது........ உங்கள் ஆசை பலிக்கட்டும்.பறவை கூடு அடைவது
    போல தாயகம் நோக்கிய உங்கள் ஆசை.நிறைவேறட்டும்

    ReplyDelete

பின்னூட்டங்கள்