சுனாமில சுவி்ம் பண்ணுவோமுள

இன்று தமிழவன் எழுதிய ”வார்ஸாவில் கடவுள்” வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ”கும்மாங்குத்து” என்பவர் ரஸ்யாவினூடாக ஐரோப்பாவுக்கு வர முயற்சிப்பார். முதல் நாள் அவருடன் பயணப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் ஆற்றைக் கடக்கும் போது  குளிர்நீரில் மு‌ழ்கி இறந்து விடுவார். மறுமுறை அவருடன் பயணித்த சோமாலிய நாட்டு இளைஞன் ஒருவரும் மின்சா‌ரம் தாக்கி இறந்து விடுவார். அதன் பின் ”கும்மாங்குத்து” போலந்து நாட்டிற்கு வந்து சேர்ந்து, போலந்து நாட்டுப் பெண்ணை திருமணம் முடித்து 2 குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பதாக கதை நகர்கிறது.

நேற்று மாலை அன்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். அவர் நண்பருமல்ல, நண்பரல்லாதவருமல்ல.  ஏற்கனவே நாம் அறிமுகமாகியிருந்‌தோம். அவரின் வீட்டிற்கு முன்பு ஒரு தரம் சென்று கணணி திருத்திக் கொடுத்திருந்தேன். அப்போது அவர்கள் வீட்டில்  6 - 7 இளைஞர்கள் குடியிருந்தார்கள். அங்கு தங்கியிருந்த சில மணிநேரங்களின் போது எனக்கு அவர்களுடைய கதைகளின் சுருக்கம் சொல்லப்பட்டது.  எல்லோரும் மிகவும் சிரப்பட்டு, சொத்துக்களை  விற்று, வட்டிக்கு பணம் பெற்று பல கனவுகளுடன் நோர்வேக்கு வந்திருந்தார்கள். அனைவரினதும் அகதி விண்ணப்பங்கள் 3 த‌டவைகளுக்கு மேலாக நிராகரிக்கப்பட்டு அவர்களை நாட்டை  நாட்டைவிட்டு வெளியேறும்படி அவர்களுக்கு நோர்வே அரசு கட்டளையிட்டிருந்தது. அவர்கள் ஒளிந்து வாழ்ந்து களவாக வேலை செய்துகொண்டிருந்தனர்.

நேற்று அங்கு போன போது மூவர் மட்டுமே அங்கிருந்தனர். சில வாரங்களுக்கு முன் ஒருவரை போலீஸ் பிடித்து இலங்கைக்கு திருப்பியனுப்பியிருந்தது. மற்றவர்கள் இருவரை அவர்கள் தொழில்புரிந்த இடத்தில் வைத்து கைது செய்து அனுப்பியதாம் என்றார். அவர்கள் வேலை செய்தது எவருக்கும் தெரிய சந்தர்ப்பமில்லையே என்றேன். ஆம், அவர்கள் களவாகவே வேலை செய்தனர் என்றும். ஆனால் அவர்களின் முதலாளியின் தொழில் போட்டியாளர்களால் (தமிழர்) காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் சொன்னார். சகலமும் புரிந்தது. நாம் தமிழரல்லவா?

அவர்களின் போட்டி அந்த இருவரின் வாழ்க்கைக்கும் ‌இழப்பைக் கொடுத்திருக்கிறது.  அவ்விருவரும் இலங்கையில் இருந்து தொலைபேசியில் அழைத்து தங்கள் சம்பளத்தை அனுப்புமாறு கேட்டுள்ளதாகவும் சொன்னார்.  கேட்கவே பரிதாபமாய் இருந்தது. எவ்வளவு இன்னல்களின் மத்தியில் வந்து சேர்ந்திருப்பார்கள். அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எத்தனை எத்தனை கனவுகள் இருந்திருக்கும். சிலவேளைகளில் அவை இனியும் கனவுகளாகவே இருக்கவும் கூடும்...

இந்த இருவருக்கும் முன்பு பிடிபட்டு அனுப்பப்பட்டவரின் கதை சற்று வித்தியாசமானது. அவர் இங்கிருந்த காலங்களில் கற்பனையில் விசா தயாரித்து எக்கச்சக்கமாய் பணம் பார்த்தவராம். வாய்ச்சொல்லில் வீரனாயிருந்ததாலும் சிலர் அவரை கண்மூடித்தனமாய் நம்பியதாலும் இவரின் காட்டில் மழை பெய்திருக்க இவர் தற்போது சீரும்சிறப்புமாய் ஊரில் வாழ்கிறாராம். அத்துடன் நான் உங்கள் சமயத்தில் சேர்கிறேன் எனக்கு அவசர பண உதவி தேவையாய் இருக்கிறது  என்று மதத்தில் மதம் கொண்டவர்களுக்கே காதில் பூசுற்றியவராம். அதிலும் சில பத்தாயிர குறோணர்கள் பார்த்தாராம்.

இவன் போனது ஊருக்கு நிம்பதி என்றார் அவர். அவரால் நிம்மதியிழந்தவர்கள் என்ன சொல்வார்கள் என யோசனையோடியது எனக்கு.

எனக்குத் தெரிந்த இன்னொருவர் இங்கு வீசா பிரச்சனை என்றதும் ஊருக்குப் போனார். போய் ஒரு மாதத்திற்கிடையில் சட்டக்கல்வி பயிலத் தொடங்கியிருக்கிறார். இறுதியாய் அவருடன் பேசிய போது மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார். அவருக்கு கலியாணம் பேசியிருந்ததும் அதற்குக் காரணமாயிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த இன்னொருவருக்கு நாட்டைவிட்டு வெளியேறு என்று உத்தரவு வந்திருக்கிறது. புதிதாய் திருமணமானவர். சிறு குழந்தையுமுண்டு. மனிதர் மிகவும் வலிநிறைந்த காலத்தை கடந்து கொண்டிருக்கிறார். இரவில் நிம்மதியாக உறங்கமாட்டார் என்பதை நான் நன்கு அறிவேன். நிம்மதியான உறக்கமின்றி மனச்சஞ்சலத்துடன் நானும் பல நாட்களை கடந்திருக்கிறேன். ஆயினும் எனது நாட்களை விட அவரின் இரவுகள் பயங்கரமானதாயிருக்கும்.

பல மனிதர்கள். பலவிதமான தலையெழுத்துக்கள். வாழ்வு ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு விதத்தில் ‌புறட்டிப்போடுகிறது. என்னையும் இப்படித்தான் பலமுறைகள் வாழ்வு புறட்டிப்போட்டிருக்கின்றது. அவற்றில் இருந்து ஏதோ ஒரு சிறு அதிஸ்டம் என்னை ஒவ்வொரு முறையும் மீட்டுத் தந்திருக்கிறது. அதே போல் இந்தக்கதையில் வந்தவர்களுக்கும் ஒரு அதிஸ்டம் கிடைக்காமலா போகும்?

இன்றைய நாள் நல்லதா?


.

2 comments:

  1. எமது இளைஞர்கள் பலரின் வாழ்வு இவ்வாறு கருகிக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.
    இன்றைய நிலையில் வெளிநாட்டு வாழ்வுக்கு ஆசைப்படுவதை விட்டு இங்கேயே வாழப் பல வழிகள் இருக்கின்றன. பலரும் பயன்படுத்த முன் வருகிறார்கள் இல்லை.

    ReplyDelete
  2. இங்கே விசா மறுக்கப்பட்ட சிலர் தற்கொலைக்கு கூட முயன்றிருக்கிறார்கள். வெளிநாட்டில் உள்ளவர்கள் இதில் புத்திமதி சொன்னால் அங்குள்ளவர்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுதான் கசப்பான உண்மை. நிலைமை மாறவேண்டும் என்பதே எனது பிராத்தனை

    ReplyDelete

பின்னூட்டங்கள்