அம்பானியும் உசாமாவும்


இன்று காலை கண்ணாடியில் எனது அழகிய திருமுகத்தை பார்த்துக் கொண்டபோது தலைமயிர் வெட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் புரிந்தது. இன்று எப்படியாவது தலைமயிர் வெட்டுவது என்றும் முடிவெடுத்துக் கொண்டேன்.

எனது ஆஸ்தான முடிதிருத்துபவராக ”ஈட்ரி்ஸ் உசாமா” என்னும் பாலஸ்தீனியர் பல காலமாக இருந்து வந்தார். அவரை உசாமா என்றே நான் அழைத்தேன். மிகவும் அன்பான பண்பான மனிதர். மூன்று கிழமைகளுக்குள் நான் அவரிடம் போகாவிடின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ”என்ன உன் தைலைமுடி வளருவதை நிறுத்தி விட்டதா?” என்பார்.

ஒஸ்லோவில் உள்ள ஒரு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு ஒதுக்குப்புறத்தில் நான்கு வீதிகள் சந்தித்துக் கொள்ளும் ஒரு சந்திப்பில் தனது சலூனை வைத்திருந்தார் உசாமா.

அவர் அங்கு சலூன் வைத்த போது அருகில்  வேறு சலூன்கள் இருக்கவில்லை. வியாபாரம் அமோகமாக ஓடியது. எப்படி இன்று வியாபாரம்? என்று கேட்டால் இரண்டு உள்ளங்கையையும் ஒன்றுடன் ஒன்றை சேர்த்து மிக வேகமாக தேய்த்துக் காட்டுவார். அவரின் கண்களில் ”டொலர்”  தெரியும். நானும் புரிந்து கொள்வேன்.

ஆனால் அவர் சலூன் வைத்து ஒரு வருடத்திற்குள் அவரின் சலூனுக்கு அருகிலும், பக்கத்திலும், கிட்டயும், மேலும், கீழும், சற்றுத் தூரத்திலும் என்று எங்கு பார்த்தாலும் மழைக்குப் பின் முளைத்த காளான்கள் மாதிரி வெவ்வேறு ”சைஸ்”களில் பல சலூன்கள் தோன்றின.

ஒரு வருடத்துக்கு முன்பு அவர் கண்களில் ‌தெரியும் டொலர் மறைந்து போனது. உள்ளங்கையை தேய்க்கும் வேகமும் வெகுவாய் குறைந்து.
ஒரு முறை எனது தலையில் இல்லா மயிரை தேடித் தேடி வெட்டிக் கொண்டே என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார்.
கதைப்பார்...
கதைத்தபடியே குனிந்து எனது தலையில் மயிர் எங்காவது தென்படுகிறதா என பார்ப்பார்.
அப்படி எதையும் கண்டால் ஒரே பாய்ச்சலில் அதன் கதையை முடிப்பார்.
பிறகு கதைத்தபடியே எனது தலையில் மயிர் தேடுவார்
இப்படி கதைத்துக் கொண்டிருந்த போது தான் தனது தொழிலை விட உத்தேசித்துள்ளதாக மிகவும் மனவருத்தமாய் கதைத்தார். ஏன் என்ற போது இந்த ஏரியாவில் மனிதர்களை விட சலூன்கள் அதிகமாக இருக்கிறது என்றும், தனது வருமானம் வெகுவாய் குறைந்திருப்பதாயும், மனைவி மக்களை நோர்வேக்கு அழைக்க அரசாங்கத்துக்கு வருமானம் காட்ட வேண்டும் என்றும் அந்தத் தொழிலால் வரும் வருமானம் தனக்கே காணாதிருப்பதாயும் கூறினார்.

இதற்கு முன் ஒரு நாள் பின்னிரவில் உசாமாவும் நானும் உசாமாவின் வியாபாரத்தை எப்படி அதிகரிக்கலாம் என ஒரு பிட்சாவை நடுவில் வைத்து, எதிரெதிரே இருந்து கதைத்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நானும், சாப்பிட்ட பிட்சாவுக்கு வஞ்சகம் செய்யாமல் ஒரு ஐடியா கொடுத்தேன். ”காத்திருப்பவர்களுக்கு இலவசமாக இன்டர்நெட் வசதியுள்ள கணணி வசதி செய்து கொடு என்று”
இதைக்கேட்ட தனது வியாபாரம் பல்கிப்பெருகி தான் ஓஸ்லோவையே வாங்கிப்போட்டது போல உசாமா பெரு மகிழ்ச்சி கொண்டார்.  குட் ஐடியா என்று பாராட்டினார்.

இதன்பின்னான ஒரு நாள் உசாமா தான் சில கவர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி பாவனையாளர்களை உள்ளே இழுக்க முயற்சித்தார்.
முதலாவதாக பெரிதாக ஒரு விலைப்பலகை வாங்கினார். வெள்ளை நிறத்தால் மற்றக் கடைகளில் உள்ள விலையை எழுதினார். அதை சிவப்பு நிறத்தால் ஒரு X போட்டு ‌வெட்டினார். அதனருகில் புதிய விலையை நீலத்தால் எழுதினார்.புதிய விலைகளில் 20 சதவீத கழிவு தெரிந்தது.

இந்த உத்தி சிறப்பாக வேலை வேலை செய்தது.அவரின் காட்டில் அன்று பெரு மழை பெய்தது. ஆனால் அடுத்து வந்த நாட்களில் ஏனைய சலூன்காரர்கள்  சிவப்பு நிறத்தில்  உசாமாவின் விலைகளை X போட்டு வெட்டி, தங்களின் விலையைக் குறைத்தார்கள்.

ஒரு வாரத்துக்குள் மீண்டும் கொசு அடிக்கும் நிலை வந்த போது உசாமா மிகவும் மனமொடிந்து போனார்.  மற்றய சலூன்காரர்கள் தனது வியாபார உத்தியை பயன் படுத்துகிறார்கள் என்றும் அது நியாயமற்றது என்றார். அவரின் வியாபார உத்தியை அவர் மட்டுமே பாவிக்கலாம் என்பது அவரின் அசைக்கமுடியாத கருத்தாக இருந்தது.

அடுத்த உத்தியாக தன்னிடம் 5 முறை தலைமுடி வெட்டினால் 6வது முறை இலவசம் என்று புதியதொரு  கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தார். ஆனால் அதன் பலாபலனை அவர் காண 5- 6 மாதங்கள் எடுக்கும் என உணரத் தவறிவிட்டார் நண்பர் உசாமா. தனது இரு பெரும் திட்டங்களும் தோல்வியுற்ற நிலையில் ஒரு நாள் என்னை தொலைபேசியில் அழைத்தார். உனது வாகனத்தை எடுத்து வா என்றும் கட்டளையிட்டார்.

நான் அங்கு போயிறங்கிய போது உசாமாவின் கடையில் ஒரு சாமானும் இருக்கவில்லை. எல்லாவற்றையும் பெட்டியில் கட்டிவைத்திருந்தார். எனது ஐடியாவின் படி அவர் பூட்டியிருந்த கணணி வைரஸ் பிடித்து இயங்கமுடியாமல் இருந்தது.‌

தேனீருடன் இருவரும் சோபாவில் சரிந்து கொண்டோம். என்ன செய்ய உத்தேசம் என்றேன். தொண்டையைக் கனைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தப‌டியே சொன்னார் ஒரு மணிநேரம் பொறுத்துக்கொள் என்று. சரி என்று தலையாட்டினேன்.

இருவருமாய் கடையில் இருந்த பொறுட்களை எனது வாகனத்தில் ஏற்றினோம். சிவப்பு நிறமான மொத்தமான பிளாஸ்டிக் தோலால் செய்த சுழல் கதிரையை தூக்கி வைத்த போது அவர் கனத்த மெளனத்திலிருந்தார். நானும் ஏதும் பேசவில்லை.

அவர் சொன்ன இடத்தில் பொருட்களை இறக்கினோம். பின்பு என்னை ஒரு சிறிய கந்தோருக்கு அழைத்துப் போனார். அங்கிருந்த ஒரு பத்திரிகையை என் முன் எடுத்துப் போட்டார். அது அரபி அல்லது அரபுமாதிரியான ஒரு மொழியில்  எழுதப்பட்டிருந்தது.  பின்பு அதை எடுத்து வலமிருந்து இடமாகவோ,  இடமிருந்து வலமாகவோ உசாமா படித்தார். பின்பு தான் இந்தப் பத்திரிகையை நடாத்த முடிவெடுத்திருப்பதாகச் சொன்னார்.

ஓஸ்லோவில் பல்லாயிரக்கணக்கான அரபிமொழிபேசும் மக்கள் இருப்பதாயும் ஆனாலும் அவர்களுக்கென்று ஒரு பத்திரிகையும் இல்லை என்றார். எனவே தனது இந்த வியாபாரம் கொடிபட்டிப் பறக்கும் என்று அவர் சொன்ன போது அவரின் கண்களில் ”டொலர்” தெரிந்தது. நீ பாலஸ்தீனத்தின் அம்பானி ஆக வாழ்த்துக்கள் என்ற போது அல்லா மனது வைத்தால் எதுவும் நடக்கும் என்று சொல்லி வழியனுப்பினார்.

பி.கு: இன்று தலைமயிர் வெட்ட ஒரு சலூனை தேர்ந்தெடுத்து உட்புகுந்தேன். வெளியில் குளிர் -14 ஆக இருந்தது. உள்ளிருந்தவர் தூண்டில் போட்டு காத்திருப்பவர்களைப் போல கடையைத் திறந்து வைத்துக்கொண்டு உள்ளே காத்திருந்தார். நான் உள்ளே புகுந்ததும் மீன் அகப்பட்ட சந்தோசம் அவரின் முகத்தில் தெரிந்தது. அவரும் உசா‌மா மாதிரி எனது தலைமயிரை தேடித் தேடி வெட்டினார். ஏறத்தாள 10 நிமிடங்கள் என் தலையில் தனது கைவண்ணத்தை காட்டிய போது அவரின் தொழில் நேர்மையில் எனக்கு பலத்த சந்தேகம் வந்தது. ஆர்வக் கோளாரினால் நீங்கள் எந்த ஊர் என்றேன் பாலஸ்தீனம் என்றார்.

எனது தலைக்கும் பாலஸ்தீனத்துக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகப் படுகிறது எனக்கு. உங்களுக்கும் அப்படியா?


இன்றைய நாளும் நல்லதே

.

1 comment:

  1. எனக்கும் முடி வெட்டும் காலம் கடந்துவிட்டது. ஞாபகம் வந்தது உங்கள் பதிவால்.
    ஆனால் வெட்டச் சென்றால் இப்படியான சுவார்ஸமான விடயங்கள் கிடைப்பதில்லையே.

    ReplyDelete

பின்னூட்டங்கள்