இக்கரைக்கு அக்கரை பச்சை இல்லை

தனது கணணிக்கு உதவிதேவை என்றழைத்வரின் வீட்டுக்கு மைனஸ் 10 குளிரில் நிலக்கீழ் சுரங்க ரயில் எடுத்து, பஸ் பிடித்து நடந்து போய் வீட்டு  மணியை அழுத்தினேன். காத்திருக்க வைக்காமல் வந்து தனது தொடர் மாடி வீட்டினுள் அழைத்துப் போனார். வீட்டின் வெப்பநிலை மனதுக்கும் உடலுக்கும் இதமாயிருந்தது.

வீடு  மிக நேர்த்தியாகவும் வெளிச்சமாகவும் மிக அழகாக இருந்தது. வயதான பெண்மணி. வயது 70 இருக்கும். அவரின் கணணிப்பிரச்சனையை விளக்கினார். நான் வேலையை ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் தேத்தண்ணியுடன் வந்தார். வேலை செய்தபடியே தேனீர் குடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம்.

தனியே வாழ்கிறார். கணவர் காலமாகிவிட்டதாகவும், குழந்தைகள் வேறு ஊரில் வசிப்பதாயும், நத்தாருக்கு தனது குழந்தைகளை பார்க்கப் போவதாயும் கூறினார்.

என்னைப் பற்றியும் விசாரித்தார். இதுவா உன் தொழில்? என்றார். இல்லை நான் நோர்வேயின் வெளிநாட்டமைச்சகத்தில் கணணிப்பிரிவில் முகாமையாளராக தொழில் புரிவதாகக் கூறியதும், தானும் வெளிநாட்டமைச்சகத்தில் 22 வருடங்களாக தொழில் புரிந்ததாகவும், பல நாடுகளில் நோர்வே தூதராலயங்களில் விசா வழங்குனராக தொழில் புரிந்ததாகவும், இறுதிக் காலங்களில் மக்கடோனியா நாட்டின் ஸ்கொப்ய நாட்டில் பல வருடங்கள் தொழில் புரிந்த பின், தற்போது ஓய்வு பெற்று நிம்மதியாய் வாழ்வதாகவும் குறிப்பிட்டார்.

எமது பேச்சு கொசோவோ நாட்டின் பிரச்சனை பற்றிப் போனது. தூதுவராலயத்தில் தொழில் புரியும் போது பல மனிதர்களின் வாழ்க்கைச் சோகங்களை கண்டிருப்பதாகவும் சொன்னார். பலரின் வீசா பிரச்சனைகள் பல நாட்கள் தனது தூக்கத்தை கெடுத்திருப்பதாகவும், சட்டங்களுக்கு உணர்வுகள் இல்லையாதலால் பலருக்கு தான் வீசா மறுத்திருப்பதாகவும் கூறினார்.

பலருக்கும் வீசா மறுக்கப்படும் போது வேதனையாயிருக்குமென்றும் ஆனால் தான் ஒருவருக்கு விசா மறுத்த சம்பவம் தனக்கு இன்றும் மகிழ்ச்சியைத் தருவதாகவும் சொன்னார்.

தான் மக்கடோனியாவில் தொழில் புரிந்த நாட்களில் ஒரு நாள் ஒரு கோசோவோ நாட்டிலிருந்து ஒரு பெண் விசா எடுப்பதற்காக இவர் தொழில் புரிந்த தூதுவராலயத்திற்கு வந்திருக்கிறார். அவரின் விண்ணப்பத்தை பரீசிலீப்பதற்கான அதிகாரியாகவும், நேர்முகத் தேர்வாளராகவும் இவர் இருந்திருக்கிறார். அப் பெண்ணை அவளின் இரு உறவினர்களே அழைத்து வந்ததாகவும் அவர்கள் தாங்களும் நேர்முகத்தேர்வில் பெண்ணிண்  சார்பில் மொழிபெயர்க்க வருவதாகவும் அடம் பிடித்திருக்கிறார்கள். இவரும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.

நேர்முகத் தேர்வின் போது பல கேள்விகளுக்கு பதில் அப் பெண் சொல்ல முதலே வந்திருந்த உறவினர் சொல்லியதாகவும், அந்தப் பெண்ணுடன் அவர் வாதித்தது போல தான் உணர்ந்ததாகவும், அந்தப் பெண் மிகவும் சோகமாக அமர்ந்திருந்ததாகவும் சொன்னார்.

அப் பெண்ணின் சோகமான முகம், அன்று தனது தூக்கத்தைக் கெடுத்ததால் மீண்டும் அப்பெண்ணை நேர்முகத்தேர்வுக்கு முடிவு செய்து, அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து கடிதம் போட்ட போது அப் பெண்ணிண் உறவினர் அவளை அழைத்து வந்து, இம் முறையும் அவரே மொழிபெயர்க்க முட்பட்டபோது தான் தனது அலுவலகத்தில் உள்ள ஒரு ஊழியரைக் கொண்டு மொழிபெயர்த்துக் கொண்டுதாகவும், அப்போது அப் பெணிடம் நீ திருமணம்  செய்யப்போகிறாயே பிறகேன் சோகமாயிருக்கிறாய் என கேட்ட போது... எனக்கு எனது கிராமத்தையும், பெற்றோரையும், சகோதரங்களையும், எங்கள் தோட்டத்தையும்ணள விட்டு வெளியேற விருப்பமில்லை எனவும், கலியாணத்தின் பின் தான் ஒரு வேலைக்காரி போல நடத்தப்படும் சந்தர்ப்பமே அதிகம் என்றிருக்கிறார்.

ஏன் அப்படிக் கூறுகிறாய்? கணவர் நல்லவராகவும் இருக்கலாமே என்ற போது  என்னுடன் வந்திருக்கும் உறவினர் பெருந்தொகை பணத்தைப் பெற்றுக் கொண்டு கணவராகப்போபவரின் குடும்பத்தினை கவனித்துக் கொள்ள ஒரு வேலைகாறியையே அங்கு அனுப்புவதாகவும், அதற்காக திருமண ஒப்பந்தம் முலம் விசா எடுக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

மணப்பெண்ணுக்கு விசா கொடுக்கப்பட வேண்டியது சட்டம்.சட்டத்ற்கு தேவையான எல்லாவிதமான பத்திரங்களும், ஆவணங்களும் இருக்கின்றன. விசாவை சட்டத்தினை காரணம் காட்டி மறுக்கமுடியாது. நீதிமன்றத்திலும் பெண்ணுக்கு விசா கொடுங்கள் என தீப்பாகலாம். எனவே அப் பெண் தனக்கு விசா வேண்டாம் என அறிவித்தால் தாங்கள் விசாவை ரத்துச் செய்யலாம் என்று அப் பெண்ணுக்கு கூறிய போது, அப் பெண் மறு பேச்சில்லாமல் தனக்கு விசா வேண்டாம் என எழுதித் தந்து போனதாகவும். ஆனால் தனது உறவினருக்கு இது பற்றி சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் சொன்னார்.

தான் விசா மறுத்த போது அந்தப் பெண்ணின் உறவினர் தாம் தூம் என்று துள்ளிக் குதித்த போது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அவரை வெளியேற்றி அனுப்பும் போது அப் பெண்ணின் கண்களில் தெரிந்த நன்றியுணர்வு இன்றும் தனது மனதுக்கு இதமாக இருக்கிறது என்றார்.

எனக்கேதோ அந்தப் பெண் மிக முக்கியமானதோர் முடிவை எடுத்திருப்பதாகவே பட்டது. அதே வேளை விசா கொடுக்கும் அதிகாரிகளும் மனச்சாட்சியுள்ள மனிதர்களே என்றும் புரிந்தது.

இப்படியான சந்தர்ப்பங்கள் ஆயிரத்தில் ஒன்றாகவோ அல்லது பத்தாயிரத்துக்கு ஒன்றாகவோ நடக்கும். ஆனால் கணணி திருத்த வந்தவனோடு இப்படியானதோர் கதையை ஒரு விசா வழங்குனர் பகிர்வது லட்சத்தில் ஒன்றாக அல்லது பத்து லட்சத்தில் ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் நான் லட்சத்தில் ஒருவனோ அல்லது பத்து லட்சத்தில் ஒருவனோ அல்ல.. மிகச் சாதாரணமானவன்.


இன்றைய நாளும் நல்லதே.



.

2 comments:

  1. மனதை தொட்ட பதிவு. எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சஞ்சயன்.

    ReplyDelete
  2. மனதோடு பேசுவது போல் உங்கள் பதிவு எளிமையாய் ( சிம்பிள்) இருக்கிறது

    ReplyDelete

பின்னூட்டங்கள்