என் இளவரசியும், கண்முன்னே விரியும் அதள பாதாளமும்


எனது 100 வது பதிவு இது. எனது அனுபவங்களை ஏதோ ஒருஆர்வத்தில் எழுதத் தொடங்கி எறக்குறைய 99 அனுபவகளை பதிந்தாகிவிட்டது.

இன்று, எனது இளைய மகளின் 10வது பிறந்த நாள்.அவளின் பிறந்த நாளும், எனது 100வது பதிவும் தற்செயலானவையே. வாழ்க்கை எமக்கு தந்து போகும் பல சம்பவங்களைப் போல.

இன்றைய பதிவு, மகள் எனக்குத் தந்த இனிமையான, ஈரலிப்பான நினைவுகளை சுமந்து வருகிறது. குழந்தைகளுடன் வாழும் ஒவ்வொரு நாளும் இனிமையான, சுகமான நாட்களாகவே இருக்கின்றன, தினமும் வாழ்வு தன் வலிமையைக் காட்டிப் போகினும் கூட.

2000மாம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி போல் வடமேற்கு நோர்வேயின் மலைகளுக்கும், மலைகளைச் சூழ்திருந்த கடலேரிகளுக்கும் நடுவில் அமைந்திருந்த ஒரு மகப்பேற்று மருத்துவமனையின் ஒரு அறையில் ஒலித்துக்கொண்டிந்த மெதுவான பியானோ இசைக்கு மத்தியில், தாயின் அலரலையும் தாண்டி, பியானோ இசையை விட இனிமையான அழுகையுடன் என்னுடன் அறிமுகமாகினாள் ”அட்சயா மாதுமை” என்னும் எனது பூக்குட்டி.

ரத்தமும் சதையும் கலந்திருந்தவளின் தொப்புள் கொடியை என்னை வெட்ட அனுமதித்தார்கள். பயந்து பயந்து வெட்டினேன். அதன் பின்பே தாயிடம் போனாள்.

முதன்முதலில் மூத்த மகளை தூக்கும் போதிருந்த அநாவசியமான பயங்கள் மனதிலிருந்து அன்றிருந்தது, அனுபவம் தந்து போயிருந்த பாடங்களால்.
தாய்ப்பாலை தவிர்த்து தாய்க்குச் சமனாய் கவனித்துக் கொண்டேன் அவளை. மெதுவாய் நிலைகொள்ளத் தொடங்கிய கண்கள் என்னைப் பார்த்திருக்கும் போது உலகமே மறந்து போகும். பின்பு என்னைப் பார்த்து புன்னகைத்த போது காற்றில் பஞ்சாயிருந்தது மனது.

குளிப்பாட்டி,உணவூட்டி, பால் பருக்கி, உலாவி வந்து, தாலாட்டுப் பாடி அவள் தூங்கும் போது, நானும் தூங்கிப் போவேன் அவளருகில்.

முகமெல்லாம் எச்சில் முத்தம் தந்து,
மெதுநடை பயின்று,
பா.. ப்பா, அப்பா என்று அழைத்து,
கழுத்தில் அமர்ந்து இளவரசி போல் ஊர் உலாவந்து,
அழுது அமர்களம் பண்ணி,
கண்டதும் ஒடிவந்து கட்டியணைத்து
பொம்மைகளுடன் விளையாடி, மகிழ்ந்து
என்னைப் போல் முகச்சவரம் செய்ய அடம் பிடித்து
முகம் முழுக்க சவர்க்காரம் பூசி, கையால் சவரம் செய்து
கேள்விகளாலேயே உலகம் பயின்றிருந்த போது
அவளுக்கு வயது நான்காயிருந்தது.

அவளின் சிறுவர் பூங்கா நண்பிகள் எனக்கும் நண்பிகளாய் இருந்தனர். பூக்களுடன் வாழ்ந்திருந்த காலம் அது.


முச்சக்கர வண்டியில் இருந்து இரு சக்கர வண்டிக்கு மாறிய நாளும் மறக்க முடியாதது. அப்பா விடாதே பிடி என்று உத்தரவிட்டு, மெதுவாய் ஓடி, சற்று வேகமெடுத்து தனியே, ஓடி நான் இல்லாதிருப்பதை உணர்ந்து, விழுந்து, அழுது, மீண்டும் தனியே ஓடியபோது பெருமித்தில் உலாவியது அவள் மட்டுமல்ல நானும் தான். அதன் பின்னே ஆனந்தமான சைக்கில் பயணங்கள் பல தந்ததும் அவளே.

ஒரு முறை டென்மார்க் போயிருந்த போது, உடுப்புக்கடையினுள் நின்றவளை கணநேரத்தில் தவற விட்டனால்,கடைகளெல்லாம் தேடிக் களைத்து நெஞ்சு பட படக்க பயந்திருந்த போது அருகில் க்ளுக் என்று சிரிப்புச்சத்தத்துடன் உடைகளுக்குப் பின்னால் ஓளிந்திருந்தாள். போயிருந்த உயிர் மீண்டிருந்தது எமக்கு.


பொம்மைகளின் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர்களில் இவளும் ஒருத்தி. Barby, Bratz, Moxy girls என்று பொம்மைகளின் பெயர்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள், வாகனங்கள், விளையாட்டுப் பொருட்கள் என ஒரு உலகத்தையே உருவாக்கி என்னையும் சேர்த்து விளையாடுவாள். புரியாததையும் புரிந்ததாய் காட்டியும், புரிந்தததை புரியாததாய் காட்டியும் கடந்து வந்த காலங்கள் அவை. அறிஞர்கள் அவையில் அறிவாளியாவதை விட குழந்தைகளின் உலகில் முட்டாளவதே மகிழ்ச்சியைத் தரும் என வாசித்தறிந்த வார்த்தைகளின் உண்மையும் புரிந்தது இங்கு தான்.

5 வயதில் ஒரு முறை விடுமுறையின் பெட்டி பெட்டியாய் stroberry வாங்கி வந்து பாலும், சீனியும் கலந்து வயிறு முட்ட அவற்றை உண்டு முடித்த போது உடம்மை அசைக்க முடியாததனால் அவ்விடத்திலேயே தூங்கிப் போனோம் நாமிருவரும். இன்றும் அதை அடிக்கடி ஞாபகப்படுத்தி பழைய நினைவுகளுக்குள் பயணிக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கிறாள் என்பது என்னைப் பெருமைப்படுத்தும் விடயங்களில் ஒன்று.

பழங்கதைகளில் பெரு விருப்பம் கொண்டவள். எனது சிறுபிராயத்துக் கதைகளை கேட்டுச்சிரிப்பாள். அப்பப்பா உங்களுக்கு அடித்தாரா என்பாள் கண்கள் விரிந்த ஆச்சர்யத்தில்? தினமும் படுக்கும் போது புதிய கதைகளை அவளுக்காகவே உருவாக்க வேண்டியிருந்தாலும் என் மனமும் சலிக்காமல் அதையே செய்கிறது.

முதலாம் வகுப்பில் சேர்ந்த அன்று பெருமையாய் ஆசிரியரைப் பற்றியும், நண்பகளைப் பற்றியும் சொன்னவள், சொன்னாள் தான் பெரியவளாய் வந்து விளையாட்டுச் சாமான் விற்கும் கடையில் வேலை செய்யப் போவதாக. அதற்கும் சம்மதித்து தலை ஆட்டினேன். பரிசாய் தந்தாள் முத்தமொன்று. இடையிடையே அவள் எதிர்காலத் திட்டங்கள் மாறின. ஓரு நாள் தான் ஆசியர் என்பாள், மறு நாள் வைத்தியர் என்பாள் தற்போது விஞ்ஞானி என்கிறாள்.. அதற்கும் தலையாட்டிக் கொண்டுதானிருக்கிறேன்.. முத்தம் கிடைக்கும் என்ற நப்பாசையில்.

பூனை வேண்டும் என்று குதித்து, ஒரு பூனையைப் பெற்றுக்கொண்டாள்.அப் பூனையும் அவளையே சுற்றி நடந்தது, ஓடியது, விளையாடியது, படுத்தது.  பூனையைப் பிரிந்து வேறு நாடு வந்த பின்பும் அப் பூனையை மட்டும் மறக்காமல் இருக்கிறாள்.

விளையாடி கையை முறித்துக் கொண்டாள், தேனீக்களின் கூட்டைக் கலைத்து குத்து வாங்கினாள், விரலை கூர்மையான கத்தியால் வெட்டிக் கொண்டாள், அதற்கு 8 தையல் போட்ட போது அழாமலும் ஆச்சர்யப்படுத்தினாள், அப்பாவின் முதுகில் நடந்து நடந்து அப்பாவின் முதுகு நோவிற்கு மருந்திட்டாள். அப்பாவை யானையாக்கி தன்னை பாகனாக்கினாள்.

தற்போது எனது உடைகளையும் தேர்ந்தெடுக்கிறாள், கேட்டால், உனக்கு உடைகளை‌ தேர்வு செய்யத் தெரியவில்லை என்றும் ‌no colour sence என்றும் குற்றம் சுமத்துகிறாள். 45 வருட விதிமுறைகளை சொற்ப நேரத்தில் உடைத்தெறிகிறாள், ஏதிர்க்கும் இயலாமையை உணர்ந்தாலும் ஏனோ உயிர்க்கிறேன்.

இவ்வுலகத்தில் எனக்கு தலைமயிரில்லை என்பதையிட்டு வருந்துபவள் அவள் மட்டுமே. அன்றொரு நாள் வாய்க்கு லிப்ஸ்டிக்கும், கண்ணுக்கு மையும், காதுக்கு தோடும், நெற்றியில் (மொட்டையில்) உச்சிப்பட்டமும் அணிவித்துச் சிரித்தாள். நான் அ‌ழகாய் இருந்தேனாம் என்றாள் குறும்புச் சிரிப்புடன்.

சில வருடங்களுக்கு முன் இப்படித்தான் இவளின் அக்காவும் அப்பா!..அப்பா! யாதும் என் அப்பாவே! என்றிருந்தாள் 11-12 வயது வரை.

அவள் இப்போ தாயுடன் நண்பியாகி விட்டாள் அவள். இதன் பின் அப்பாவை கண்டு கொள்கிறாள் இல்லை. மவுசு இழந்த தென்னிந்திய கதாநாயகன் போலாகிவிட்டேன் நான். அதை ஜீரணிக்க முடியாது தவித்துக் கொண்டிருக்கிறேன் இன்று வரை.

இளையவளின் கதாநாயகனாய் இருந்ததால் பெரியவயளுடனான இடைவெளியை இலகுவாய் கடந்து கொண்டேன். ஆனால் இவளும் தாயுடன் நண்பியாகும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்னும் நினைப்பே பயத்தைத் தருகிறது. தனித்து விடுவேனோ என்னும் பயம் அதள பாதாளம் போல் என் முன்னே தெரிகிறது.

ஆனால் வாழ்வு அதற்கும் ஒரு பதிலை வைத்திருக்கும்.

பதின்மக்காலத்தின் பின் குழந்தைகள் மீண்டும் தந்தையிடம் வருவார்கள் என்கிறர்கள் அனுபவஸ்தர்கள்.

நானும் கைவிரித்துக் காத்திருப்பேன், அவர்கள் தந்திருக்கும் நினைவுகளில் நனைந்தபடியயே.

எனது ”உயிருக்கு” இது சமர்ப்பணம்.


.

6 comments:

  1. 100 க்கு வாழ்த்துக்கள்....

    உணர்ச்சிகரமான ஒரு பதிவு... கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்தது...

    ReplyDelete
  2. நெகிழ்ச்சியான பதிவு! 100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் எழுத்து சிறக்கட்டும்!

    ReplyDelete
  3. தந்தை பாசம் நெகிழ வைக்கிறது .நூறாவதுபதிவுக்கு வாழ்த்துக்கள் .
    சின்னமகளுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வருகைக்கும் நெகிழ்ச்சியான வார்த்தைகளுக்கும் நன்றிகள், நண்பர்களே!

    ReplyDelete
  5. இதயத்தைத் தொட்டு வருடியது உங்கள் கதை....! எங்கோ ஒரு மூலையில் ஓர் இனம்புரியாத வலி என்னுள்.....!

    ReplyDelete
  6. தந்தைப்பாச்ம் சிலிக்க வைக்குது அண்ணா!

    ReplyDelete

பின்னூட்டங்கள்