மறதியும் மறையாத மனிதமும்

தனக்கு காது கேட்காது, எனவே உன்னுடன் தொலைபேசியில் பேசமுடியாது என்று மின்னஞ்சல் மூலமாக சில நாட்களுக்கு முன்பு அறிமுகமாகினார் இன்றைய கதாநாயகன்.
மிக விளக்கமாக தனது கணணியின் பிரச்சனைகள் பற்றி கடிதம் போட்டார். கேட்ட கேள்விகளுக்கும் விரிவாக பதில் எழுதினார். இன்று சந்திப்பதாக உறுதி செய்து கொண்டோம் மின்னஞ்சலூடாக.

போய் இறங்கினேன்.
நோர்வேஜியர்.
வயதானவர், ஏறத்தாள 70 வயதிருக்கும்.
கறுப்பன் ஒருவனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது. ஆயினும் சற்று நேரத்தில் மிகவும் சகஜமாகப் பழகமுடிந்தது அவர்களுடன்.

கணவருக்கு காது கேட்காது, எனவே வார்த்தைகளை மெதுவாய் உச்சரித்தால் வாயசைவை வைத்து சொல்லை ஊகித்துக் கொள்வார் என்றார் மனைவி. காது கேட்காவிட்டாலும் அவரால் சரளமாகப் பேச முடிகிறது. அண்மையில் தான் ‌காது கேட்கும் சக்தியை இழந்தார் எனவும் அறியக்கிடைத்தது.

மனைவிக்கு ஞாபகசக்தி மிகவும் குறைவாக இருப்பதாகவும், பலகாலமாக இந்நோயால் அவர் அவதிப்படுவதாகவும், இது வரை நான்கு அறுவைச்சிகிச்சைகள் செய்துள்ளார் என்றும் அடுத்த கிழமை ஐந்தாவது அறுவைச்சிகிச்சை செய்யவுள்ளதாகவும் சொன்னார் கணவர்.

மனைவி நான் அங்கிருந்த 2 மணிநேரத்திலும்  எனது பெயரை பல தரம் கேட்டார். தனது பெயரை பல தரம் சொன்னார். நீ இதை பல தரம் சொல்லிவிட்டாய் என்று கணவர் சற்று உரமாகச் சொன்னதும் சற்று அமைதியடைவார். சற்று நேரத்தில் பெயர் பற்றி மீண்டும் கேட்பார், சொல்லுவார்.

எதையும் கேட்க முதல் நான் உன்னைக் குழப்புகிறேனா என்று கேட்டு நான் பதில் சொன்ன பின்பே தொடர்ந்தார். குழந்தை போலிருந்தது அவரின் பல நடவடிக்கைகள். சில நிமிடங்களுக்கு முன்பு நடந்தவற்றையும், அண்மையில் நடந்தவற்றையும் அவரால் ஞாபகத்தில் வைக்க முடியவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை நன்றாக நினைவில் வைத்திருந்தார்.

தான் 26 நாடுகளுக்கு சென்றிருப்பதாகவும், நீ எத்தனை நாடுகளுக்கு சென்றிருக்கிறாய் என்று சிறு பிள்ளை போல் கேட்டார். நான் கிட்டத்தட்ட 10 - 12 என்ற போது போட்டியில் வென்ற சிறு பிள்ளையாய் குதூகலித்தார். கணவரோ சற்று சங்கடப்பட்டார்.

நான் கணவருடன் பேசுகையி்ல் மிக ஆறுதலாக வார்த்தைகளை உச்சரித்தேன்.. பல நேரங்களில் புரிந்து கொண்டார். சில நேரங்களில் மனைவியைப் பார்த்தார். மனைவி என்னைவிட மிக ஆறுதலாக உச்சரித்துக் காட்டினார். ஆனால் மனைவி நான் சொல்லியவற்றை அவருக்கு சொல்ல முதலே மறந்துபோனார். திரும்பக் கேட்டு மீண்டும் சொல்வார். நீண்ட வசனம் எனின் மீண்டும் கேட்பார்.

கணவரின் காதுக்குள் ஒரு வித இரைச்சல் சத்தம் கேட்க ஆரம்பித்து பின்பு  காது கேட்காமல் போயிற்றாம். ஆனால் இரைச்சல் சத்தம் பெரிதாய் கேட்டுக்கொண்டிருந்ததாகவும், அதை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு கூட கணவர் முயன்றார் என்றும் சொன்னார் மனைவி. லத்வியா நாட்டுக்கு தாங்கள் போயிருந்த நேரம் அங்கிருந்த ஒரு வைத்தியர் நீண்டதோர் சிறிய குழாயை மூக்கினூடாகச் செலுத்தி ஏதோ மறுத்துவம் செய்ததால் தற்போது காது இரைச்சல் இன்றி நிம்மதியாக வாழ்வதாயும் சொன்னார்.

அந்த மருத்துவரை நோர்வேக்கு அழைத்து தமது வீட்டில் விருந்தினராக தங்கவைத்து ஊர் சுற்றிக்காட்டியதாகவும், அவர் தற்போது தங்களின் குடும்ப நண்பர் என்றும் கூறினர்.

மனைவி, தனக்கு வண்ணத்துப்பூச்சிகள் என்றால் ரொம்பவும் இஸ்டம் என்றும், தனக்கு பல பா‌ஷைகளில் வண்ணத்துப்பூச்சியை எப்படி அழைப்பது என்று தெரியுமென்றார். நான் அப்ப தமிழிலும் கற்றுத் தருகிறேன் என்றேன். பெரிதாய்ச் சிரித்தார். வரும் போது தமிழில் அதை எழுதியும் வாங்கிக் கொண்டார்.

தங்கள் வீட்டின் பின்னால் அதிகளவில் அணில்கள் வசிப்பதாயும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ஒரு அணில் தனது கைக்கருகில் வந்து கையிலிருந்த உணவை எடுத்துச் சென்றதை மிகவும் பெருமையுடன் விபரித்தார்.

தமக்கு ஒரு மகன் தான் என்றும், தனது சுகயீனம் காரணமாக வேறு பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது என்றும் சொன்னார். தங்களது பேரப்பிள்ளைகளின் படங்களைக் காட்டினர். அவர்கள் அருகில் வாழ்வதாயும், மிக அழகானவர்கள் என்றும் சொன்னார் மனைவி.

அவர்கள் இருவரும் நண்பர்கள் போல் பழகினர். ஒருவரின் பலவீனத்தை மற்றவர் ஈடுசெய்து அவர்கள் தங்களை முழுமையாக்கிக் கொள்வது போலிருந்தது எனக்கு. கணவரின் பொறுமை அசாத்தியமாகதாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதே போல் கணவர் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் மிகப் பொறுமையாகப் பதிலளித்தார் மனைவி. அவரும் பொறுமைசாலி தான்.

கணணி திருத்தி வீடுவந்து இரவு உறங்கப்போகும் போது ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவர்களிடமிருந்து.

கணணி நன்றாக ‌வேலை செய்கிறது. மனைவின் கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் பொறுமையாய் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி. என்றிருந்தது அதில்.

மனம் ஏதோ ஒரு பரவசத்தை உணர்ந்து கொண்டிருந்தது.

இன்றைய நாளும் நல்லதே

.

1 comment:

  1. வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து பாடங்கள் கற்றுக் கொள்கிறீர்கள் .அனுபவம் சிறந்த ஆசான் என்பார்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்